Share via:
வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே வாச்சாத்தி மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1992ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி வனத்துறையினர் மற்றும் காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மலைகிராம பழங்குடி பெண்களை சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையை அதிரச் செய்து பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவ்வழக்கை விசாரித்து வந்த தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள்தான் என அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக 17 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கடந்த காலங்களில் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளவர்களுக்குத்தான் ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதற்கான இருதரப்பு வாதங்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்தியாவே கடந்த 30 ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த அந்த நாள் அதாவது தீர்ப்பு நாள் இன்று. அதன்படி 215 குற்றவாளிகளின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பு அளித்தது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மலைகிராம மக்கள் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வாய்மையே வெல்லும்.