Share via:
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சட்ட ஆணையம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாடாளுமன்ற மக்களவையுடன் சேர்த்து அனைத்து மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டால் தேர்தலுக்கு ஆகும் செலவு பெருமளவு குறைந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 2ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு இத்திட்டத்தின் சாதக, பாதகம் குறித்த ஆய்வை தொடஙட்கியது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 23ம் தேதி டெல்லியில் இக்குழுவின் முதல் கூட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இத்திட்டம் குறித்து மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்பது என்றும் தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அரசிடம் 3 அறிக்கைகளை 22-வது சட்ட ஆணையம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளது. அதில், முக்கியமானதாக பார்க்கப்படுவது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான அறிக்கை என்றும், இத்திட்டத்தை வருகிற 2024 மற்றும் 2029-ம் ஆண்டுகளில் அமல்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது.