Share via:
விபத்தில் சிக்கி உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர் சூர்யாவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 24ம் தேதி எண்ணூரைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அரவிந்த் சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தெரிந்ததும் நடிகர் சூர்யா மிகவும் வேதனை அடைந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து உயிரிழந்த அரவிந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா, அரவிந்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அரவிந்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள், நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பேனர் கட்டிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயரிழந்தார். அவர்களின் குடும்பத்தினருடன் நடிகர் சூர்யா வாட்ஸ் அப் காலில் அழைத்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.