Share via:
இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 பேருக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பணி ஆணைகளை வழங்கினார்.
பணி ஆணைகளை வழங்கிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை நீங்கள் எந்தவித குறையுமின்றி செய்ய வேண்டும். தகுதியான அரசு அலுவலர்களை தேர்வு செய்யும் பணியை டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் ஆகியவை சிறப்பாக செய்து வருகின்றன.
அதன் அடிப்படையில் காலி பணியிடங்களை தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப புதிய சட்டத்தை இயற்றி, அதன் மூலம் தேர்வான உங்களுக்கான பணி ஆணையை இன்று வழங்கியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘தற்போது 10,205 பேருக்கு அரசு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.