Share via:
வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்று தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தன்று கருவறையில் உள்ள தெய்வத்தின் நெற்றியின் மீது சூரியக்கதிர்கள் விழும் வகையில் கோவிலின் சிகரத்தில் நிறுவப்படும் ஒரு கருவியை வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் பல நன்கொடைகளை வழங்கி கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வந்தனர். அதன்படி ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கட்டுமான குழுத் தலைவர் அறிவித்துள்ளார்.
அதன்படி வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்படும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் ராமர் கோவில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.