Share via:
ஆவின் பால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்படுவது வெறும் வதந்திதான் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ஆவின் பொருட்களின் நுகர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சில ஆவின் பொருட்களின் விலை அதிகரிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சமூகவலைதளங்களில் ஆவின் பால் விலை உயர்கிறது என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர்பேசும் போது, ‘‘தமிழ்நாட்டில் பால் விலையை இப்போதைக்கு உயர்த்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. விலை உயர்வு செய்தி வெறும் வதந்திதான். இருப்பினும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய தேவை உள்ளதால், இது குறித்து முதலமைச்சரிடம் பேசி விரைவில் முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘தனியார் பால் நிறுவன விலையுடன் ஒப்பிடுகையில் ஆவின் பாலின் விலை குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தனியார் நிறுவன நெய் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் போதும், ஆவின் நெய் 700 ரூபாய் அளவுக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆவின் பொருட்கள் அளவிலும், தரத்திலும் எந்த சமரசமும் செய்வதில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.