Share via:
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் சமஸ்கிருத
மந்திரங்கள் ஓத திருமணம் நடைபெற்றது திமுகவில் மிகப்பெரும் விவாதமாகியுள்ளது.
ஊருக்கு உபதேசம் செய்யும் துரைமுருகன் சொந்த வீட்டுக் கல்யாணத்தில்
புரோகிதரப் பயன்படுத்தி திருமணம் செய்தது திமுகவின் செந்தில்குமார், சுப.வீரபாண்டியன்
ஆகியோர் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திமுக பகுத்தறிவு கொள்கைகளை கைவிட்டு 50 வருடங்களுக்கு மேல் ஆகிறது
என்று கண்டிக்கும் திமுகவினர், ‘’புரோகித பார்ப்பனர்களின் வேத மந்திரம் முழங்க அஷ்டலட்சுமிகள்
வரவேற்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் பேத்திக்கு “விவாஹ சுப முகூர்த்தம்”
ஷேமகரமாய் மங்களத்துடன் தேவாதி தேவர்களின் அருள் ஆசியுடன் நடந்து முடிந்து இருக்கிறது.
இந்த “கன்னிகாதானத்”தை நேரில் ஆசீர்வதிக்க அண்ணாவும்
கலைஞரும் இல்லையே என்று துரைமுருகன் அவர்களின் இதயம் கண்ணீர் வடித்திருக்கும். அண்ணா
இருந்திருந்தால்” நான் கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தையே இப்படி அவமதிக்கிறாயே!
நீ தான் எனக்கு தம்பியா? என்று நிச்சயம் கேட்டிருப்பார். கலைஞர் இருந்திருந்தால் வடமொழியான
சமஸ்கிருதத்தை எதிர்த்து நான் எவ்வளவு எழுதி இருப்பேன்; பேசி இருப்பேன் ; அதை நீ தேவ
பாஷை என்று ஏற்றுக்கொண்டு உன் வீட்டு திருமணத்தில் ஓத வைத்திருக்கிறாயே; இதுதான் நீ
எனக்கு காட்டும் மரியாதையா? என்று உரத்த குரலில் கேட்டிருப்பார்.
அண்ணாவும் கலைஞரும் “உனக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும்தான்
நாங்கள் தேவை; கொள்கைக்கு வேண்டாமா? என்று நிச்சயமாக கேட்டிருப்பார்கள். ஒரு கழகத்தின்
பொதுச் செயலாளராக இருந்து கொண்டு கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும்,
கொள்கை உணர்வுள்ள கழகத் தோழர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்தும், இப்படி
ஒரு வைதீகக் கூத்தை அரங்கேற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து நிகழ்த்திக் காட்டிவிட்டார்
தமிழை “உயர்மூச்சாக “க் கொண்டு வாழும் மதிப்புக்குரிய துரைமுருகன். அவரிடம்
பெரியார் கொள்கையை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
அண்ணா, கலைஞர் கொள்கைகளுக்காவது துரோகம் செய்யாமல் இருந்திருக்கக்
கூடாதா? அவர்களின் வழியாக கிடைத்த அதிகாரத்தை ஆரியத்திடம் அடமானம் வைப்பது வரலாற்றுத்
துரோகம் அல்லவா? என்ற கேள்வியை திராவிட இயக்க கொள்கைப் பற்றாளர்கள் ஒவ்வொருவரும் கேட்கத்தான்
செய்வார்கள். கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை
ஒவ்வொரு நாளும் “முரசொலி”யில் துரைமுருகன் தான் அறிவித்து வருகிறார். இப்போது
துரைமுருகன் அவர்கள் செய்திருப்பது கழகக் கட்டுப்பாட்டை காப்பாற்றும் செயல் தானா? இவர்
மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?’’ என்று கொதிக்கிறார்கள்.
பகுத்தறிவுக்கும் திமுகவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை
என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் துரைமுருகன்.

