Share via:
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள .ராஜேந்திர விஸ்வநாத்
அர்லேகருக்கு முதல்வர் விஜய் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சி,
மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க
வாழ்த்துகள் என்றும் கூறியிருக்கிறார். முழு நேர ஆளுநர் நியமனத்திற்குப் பிறகு தமிழக
அரசியல் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 12 அன்று வெளியிட்ட
அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பைத் கூடுதலாகக் கவனித்து வந்த ராஜேந்திர
விஸ்வநாத் அர்லேகர், தற்போது மாநிலத்தின் முழுநேர ஆளுநராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில
ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரள ஆளுநராக இருந்த
அர்லேகர் தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள
புதிய அறிவிப்பின் மூலம் அந்த ஏற்பாடு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராக அர்லேகர் குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் கோவாவை சேர்ந்த மூத்த பாஜக தலைவர். வெறும்
காரியகர்த்தாவாக அரசியலை தொடங்கி, கோவா பாஜக தலைவர், சட்டசபை சபாநாயகர், அமைச்சர்
(வனம், சுற்றுச்சூழல், பஞ்சாயத்து ராஜ் – 2015-17) என படிப்படியாக உயர்ந்தவர்.
ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட ஒழுக்கமான அமைப்பு மனிதர் என பாஜகவில்
பெயர் பெற்றவர். “நான் வெறும் காரியகர்த்தா” என்றே இன்றும் அவர் கூறுவதுண்டு.
இமாச்சல பிரதேசத்தில் 2021ம் ஆண்டு ஆளுநர் பதவி ஏற்றார். அடுத்து
பீகார், பின்னர் கேரளா. இங்குதான் பினராயி அரசுடன் மோதல் உருவானது. இப்போது முழுநேர ஆளுநராக தமிழகம் வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்ட
பிறகு, தமிழகம் 7 மாதமாக பொறுப்பு ஆளுநருடன் இருந்தது. மே மாதம் தேர்தல் முடிந்து தவெக
தலைவர் ஜோசப் விஜய் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்த போது, பெரும்பான்மையை
நிரூபிக்க ஆவணம் கேட்டு, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து அரசியலமைப்பு
நெருக்கடியை சமாளித்தவர் ஆர்லேகர் தான். புதிய தவெக அரசு – மத்திய பாஜக அரசு உறவு சுமுகமாக
இருக்க வேண்டும் என்பதற்காகவே, பிரதமர் மோடி சென்னை வந்த மறுநாளே அவருக்கு முழு நேர
பதவி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ராஜேந்திர அர்லேகர் மீது வைத்த நம்பிக்கையின்
அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பு என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் விருப்பத்தின் பேரிலே இவருக்கு நியமனம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது. இனி, திமுக மாஜிக்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் எனவும் அதற்கு
ஆளுநர் ஒத்துழைப்பார் என்றும் கூறப்படுகிறது.

