Share via:
ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது, விஜய் அரசுக்கு மிகப்பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது. அடுத்து இடைத்தேர்தல் நடக்கவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா,
அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிராகத் தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில்
இருந்தது.
இந்தச் சூழலில், ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுச் சபாநாயகர்
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும்
தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்குகள் தொடர்ந்தனர்.
சபாநாயகர் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட
உறுப்பினர்கள் சுயவிருப்பத்துடன் ராஜினாமா செய்தார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில்
உரிய விசாரணை நடத்தப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்கள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது
என்றும் ஒருவர் சுயவிருப்பத்துடன் பதவி விலக விரும்பும்போது அவரைத் தொடர்ந்து பதவியில்
இருக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதற்கான விசாரணையில்,
அது சுயவிருப்பத்துடன் அளிக்கப்பட்டதா என்பதையே பரிசீலிக்க முடியும் என்றும், தகுதிநீக்கம்
தொடர்பான விவகாரங்கள் தனியாக விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி
மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களும்
நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி மே 26, 2026 மற்றும் ஜூன் 29, 2026 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட
காலத்தில் ஆறு அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் முடிவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத்
அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் உறுதி செய்தனர்.
சபாநாயகரின் முடிவை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான வழக்கில், நீதிபதிகள் அம்மனுக்களைப் பகுதியளவு
அனுமதித்தனர். ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும்
என்றும், இது தொடர்பாக விரிவான அல்லது தேவையற்ற விசாரணையை நடத்த வேண்டிய அவசியமில்லை
என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேவேளையில், சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கைகளைத்
தொடர்ந்து மேற்கொண்டு, அவற்றை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தும் வாய்ப்பு
உருவாகியுள்ளது. அதேபோல் விஜய்க்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ராஜினாமா
செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

