Share via:
பிரதமரை வரவேற்பது வழக்கமாக முதல்வர்களின் பணி. ஆனால், விமானநிலையத்தில்
காத்திருந்து பிரதமர் மோடியை வழியனுப்பிய விவகாரத்தில் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார்
விஜய்.
இதனை பாஜகவினர், ‘’நாட்டின் பிரதமரை வரவேற்று, வழியனுப்பி வைப்பது
மிகப்பெரிய மாண்பு. நமது பிரதமரை நாம் மதித்தால்தான் உலக நாடுகள் நம்மை மதிக்கும்.
தங்களின் இந்தச் சிறந்த பண்பு பொது நிர்வாகத்தில் என்றும் நிலைத்திருக்க மனமார்ந்த
வாழ்த்துகள்’’ என்று பாராட்டி வருகிறார்கள்.
பிரதமரை வழியனுப்புவதற்காக
முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தார்.
சுமார் 30 நிமிட காத்திருப்புக்கு பிறகு பிரதமர் மோடி விமான நிலைய ரன்வே பகுதிக்கு
வந்தார். அப்போது முதல்வர் விஜய், பிரதமர்
மோடியை நோக்கி சென்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து, கைகுலுக்கி பேசினார். இருவரும் சுமார் 2 நிமிடங்கள்
புன்னகையுடன் பேசிக்கொண்டனர்.
தமிழகத்திற்கு மத்திய
அரசிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நிதி, புதிய திட்டங்கள், நீட் விவகாரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து
முதல்வர் விஜய் பிரதமரிடம் எடுத்துரைக்கவே அரை மணி நேரம் காத்திருந்ததாக தகவல்
வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பு கடுமையாக மத்திய அரசை விமர்சித்து வந்த விஜய், தற்போது முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசுடன்
இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார்.
இதுகுறித்து பேசும் தவெகவினர்,
‘’தமிழக
முதலமைச்சர் விஜய், கட்சியையும் ஆட்சியையும் தெளிவாகப் பிரித்துப் பார்த்துச் செயல்படுகிறார்.
நேற்று தவெக தலைவராக ராகுல் காந்தியைச் சந்தித்தார். இன்று தமிழக முதலமைச்சராகப் பிரதமருடன்
ஒரே மேடையில் பங்கேற்று, தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துரைத்ததுடன், தமிழகத்திற்கான
நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அரசியல் நுணுக்கம் பாராட்டுக்குரியது. எதிர்க்க
வேண்டும் என்பதற்காகவே எல்லாவற்றையும் எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. அத்தகைய போக்கு
இறுதியில் நமக்கே பாதகமாக அமையும். அதனால் பாதிக்கப்படப்போவது தமிழக மக்கள்தான். பிரதமர்
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தமிழகத்திற்கு வரும்போது, நெறிமுறையின்படி
அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் முதலமைச்சர்
விஜய் செய்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் செயல்பட்ட விதம், அரசியல் வேறு,
நிர்வாகம் வேறு என்பதை அவர் புரிந்துகொண்டு, இராஜதந்திர அணுகுமுறையுடன் செயல்படுவதைத்
தெளிவாகக் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம், குறை கூறலாம், எதிர்க்கவும்
செய்யலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது கடமையைச் சரியாகச் செய்துகொண்டு தொடர்ந்து
முன்னேறிச் செல்வார்’’ என்கிறார்கள்.
நல்ல மாற்றம்.

