Share via:
கடந்த ஆட்சி காலம் போன்று இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையாக
ஒளிபரப்பு செய்யப்படும் என்று தவெக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இரண்டாவது
நாளிலேயே காணாமல் போயிருக்கிறது. இதுதான் தவெக வாக்குறுதி நிறைவேற்றும் லட்சணமா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
திமுக, அதிமுக ஆட்சி காலங்களில், சட்டப்பேரவை நேரலை முழுமையாக
இருக்காது… முக்கியமான நேரங்களில் நேரலை துண்டிக்கப்பட்டு, பிறகு எடிட் செய்யப்பட்ட
வீடியோக்களை மட்டும் ஊடகங்களுக்கு தருவார்கள்.
செய்தித்துறை அமைச்சராக ராஜ்மோகன், சட்டபேரவை நேரலை முழுமையாக
இருக்கும் என்று அறிவித்ததை விஜய் கட்சியினர் கொண்டாடினார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. காலையில் வந்த
பேரவை நேரலை, முக்கியத் தருணமான மதியம் துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், ‘’இன்றைய சட்ட
சபை கூட்டத்தில் ‘தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு’ பிரச்சனைகள் குறித்து நாங்கள் கேள்வி
எழுப்பியபோது முதலமைச்சர் விஜய் அமைதியாக அமர்ந்திருந்தார். பிற துறைகள் சார்ந்த கேள்விகளை
கேட்டபோது அத்துறைகளுக்கான அமைச்சர்களும் வாயை திறந்து பேசவில்லை. தங்களுக்கு எதுவும்
தெரியாது…வாய் திறந்து தவறாக பேசிவிட்டால், அது மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதாலேயே
முதலமைச்சரும், அமைச்சர்களும் பேச வில்லையா… இவர்களின் உண்மை முகங்கள் மக்களுக்கு
தெரியக் கூடாது என்பதற்காக தான் நேரலை ஒளிப்பரப்பை நிறுத்தினார்களா..” என்று கேள்வி
எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’தமிழக காவல் துறையை தனது கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் விஜய் இதற்கு வாய் திறக்கவில்லை எனில், அவர் ஏன் அந்த துறையை வைத்திருக்க
வேண்டும்…?
திருச்சியில் பேசும்போது, ‘வாயில நல்லா வரம்’னு சொன்னாரே…எங்கே…இந்த
சட்ட சபையில் அந்த வாயிலிருந்து வர வைக்க வேண்டியது தானே… ‘சட்ட சபையில் எதிர்க்கட்சிகளே
இல்லாமல் செய்வோம்..’ என வாய் கிழிய பேசிய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ஏன் ஒரு வார்த்தை
கூட பேச தைரியம் வரவில்லை…?
சட்ட சபையில் அனைவரும் வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க தான்
நீங்கள் அனைவரும் பயிற்சி கூட்டம் நடத்தினார்களா…வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருப்பதற்கு
கூடவா உங்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. உங்களுக்கு 6 மாசம் இல்லை….6 வருஷங்கள்
அவகாசம் கொடுத்தால் கூட திமுகவினரின் கேள்விகளை உங்களால் தைரியமாக எதிர்க்கொள்ள முடியாது…’’
என்று போட்டுத் தாக்குகிறார்கள்.
டிவிட்டரில் இதற்கு இன்று பதில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
