Share via:
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலங்களில் ரூபாய் 2000 கோடி மதிப்பில்
1250 பல்குடியிருப்பு அடுக்கு மாடி வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்ற திட்டத்திற்கு
முறைகேடாக திமுக அரசால் அளிக்கப்பட்ட அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்
ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வசமாக சிக்குகிறார்.
இதுகுறித்து பேசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ‘’பெரும்பாக்கம்
பிரிகேட் நிறுவனத்தின் வீடுகளை வாங்க நினைத்திருந்தாலோ அல்லது அட்வான்ஸ் கொடுத்திருந்தாலோ
அவர்களை உடனடியாக எச்சரியுங்கள். அந்த கட்டிடத்தில் செய்யும் முதலீடு முழுக்க முழுக்க
வீண். திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, முன்னாள் அமைச்சர்
சேகர் பாபு அப்பட்டமாக விதிகளை மீறி பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலத்தின் உள்ளேயே
1250 வீடுகள் கட்ட கொடுத்த கட்டிட அனுமதி ரத்தாக வாய்ப்புள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக
அரசுகளுக்கு இடையே போடப்படும் ஒப்பந்தம் தான் ராம்சார் ஒப்பந்தம். இதன்படி 2022-ல் ஏப்ரல் 8ம் தேதி 1247.5 ஹெக்டர் அதாவது 3080 ஏக்கர்
அளவிற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார்
தளமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இதை பெருமையுடன் கொண்டாடியது.
இதன் பொருள் என்னவென்றால் 1247 ஹெக்டரில் ஏற்கனவே கிட்டத்தட்ட
690.65 ஹெக்டர் (1705 ஏக்கர்) நம் வனத்துறையிடம் காப்புக் காடாக உள்ளது. மீதமுள்ள
547 ஹெக்டரில் (1375 ஏக்கர்) உள்ள அரசு மற்றும் தனியார் பெயரில் உள்ள நிலங்களை கட்டுமானங்கள்
இன்றி ஈரநிலங்களாக பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை. மேலும் இந்திய அரசின் 2017 ஈரநிலம்
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி ராம்சார் நிலங்கள் நிர்வகிக்கப் பட
வேண்டும். மேலும் இந்த சட்டத்தின் பிரிவு 4 படி இந்த நிலங்களில் எந்த விதமான நிரந்தர
கட்டுமானங்களும் அனுமதிக்க முடியாது.
ஆனால் இந்த ராம்சார் பகுதிக்கு உட்பட்ட சர்வே எண்கள் 453, 495, 496, 497, 498 இல் உள்ள கிட்டத்தட்ட
14.7 ஏக்கர் நிலத்தில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக பிரிகேட் மார்கன் என்னும்
நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியும் கட்டுமான அனுமதியும் கோரியது.
ஜூலை 2022 அதாவது ராம்சாரில் இந்த நிலம் ஏப்ரல் 2022ல் வகைப்படுத்தி
அறிவிக்கப்பட்ட பிறகு, பிரிகேட் என்டர்பிரைசஸ்
லிமிடட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்பாக கோரப்படும் குறிப்பு விதிமுறைகள்
அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு
ஆணையதத்திற்கு விண்ணப்பம் செய்கிறது.
டிசம்பர் 11, 2024 அன்று நடந்த 517 ஆவது சந்திப்பில் மாநில நிபுணர்
மதிப்பீட்டுக் குழுக்கு சுற்றுசூழல் அனுமதிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. ஜனவரி
20, 2025 அன்று மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தை மார்கன்
பிரிகேட் நிறுவனத்திடம் கொடுத்துவிடுகிறது.
மின்னல் வேகத்தில் பெருநகர சென்னை வளர்ச்சிக்குழுமம் என்று சொல்லப்படும்
சிஎம்டிஏ சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில் 23/01/2025 கட்டுமான அனுமதியை
கொடுக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தன்னிடம் இருக்கும் ராம்சார் விவரங்களை
பார்த்து இருந்தால் கூட இந்த நிலம் ராம்சார் பகுதிக்குள் வருகிறதே என்று திட்ட அனுமதியை
மறுத்து இருக்க வேண்டும்.
இந்த கட்டுமானம் நடந்து இருந்தால் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகும்
பெரும்பாக்கத்தை இது மேலும் அதிக வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கும். அறப்போர் உயர்நீதிமன்றத்திலும்
சென்று இந்த சட்டவிரோத அனுமதி குறித்து போராடியது. உச்சநீதிமன்றத்தில் ஈரநிலங்கள் சம்பந்தமான
வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த பிரச்சனையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது
என்று கூறி விட்டது.
ராம்சார் ஈரநிலங்களில் கட்டுமானத்திற்கு உச்சநீதிமன்ற தடையும்
உள்ளது. எனவே மீண்டும் அரசுகளுக்கு அறப்போர் இயக்கம் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தது.
அறப்போர் இயக்கத்தின் தொடர் அழுத்தத்திற்கு பிறகு தற்பொழுது இதன் சுற்றுசுழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய அரசு உருவாகும்
தருவாயில் இந்த சுற்றுசூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது புதிய த.வெ.க அரசு
அப்போதைய அமைச்சர் சேகர் பாபு முறைகேடாக வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி உள்ளோம். மேலும் இந்த முறைகேடுகளில்
ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’’ என்று அறப்போர் இயக்கம்
சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் சேகர்பாபு 200 கோடி ரூபாய் வாங்கியதாக சொல்லப்படுவதால்
விரைவில் விசாரணையும் சிக்கலும் ஆரம்பமாகும் என்கிறார்கள். விஜய் நடவடிக்கை எடுப்பாரா..?
