Share via:
சட்டப்பேரவையில் விஜய் கொண்டுவந்த மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்துக்கு
தமிழகத்தின் அத்தனை கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. அதேநேரம், மேகதாது அணைக்கு எதிராக
இதுவரை தமிழக சட்டசபையில் ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 டிசம்பர் மாதம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக
இருந்தபோதும், அவரே 2015 மார்ச் 27ல் முதல்வராக இருந்தபோதும் என இரண்டு முறை தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து 2018 டிசம்பர்
6ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதும், 2022 மார்ச் 21ல்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மேகதாது
அணைக்கு எதிராக கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு அத்தனை கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை
9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள்
சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகதாது விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை
எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று
அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும்
மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின்
எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே
மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை
தெரிவித்துக்கொள்கிறது. கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம்,
சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றம், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை
படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டால்,
காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான
பிரச்சினையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு
எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தையோ, பிற படுகை மாநிலங்களின்
இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக
அரசினை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது
நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள
குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள்
நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை
தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது” என்று முதல்வர் பேசினார். அதனைத்தொடர்ந்து,
முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர்கள்
பேசினார்கள்.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி காங்கிரஸ்,
விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள்
முதல்வரின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியுள்ளனர்.
மேகதாது திட்டத்தை ஏன் தமிழகம் எதிர்க்கிறது தெரியுமா..?
தமிழ்நாட்டிற்குள் காவிரி நீர் நுழையும் பிலிகுண்டுலுவிலிருந்து
4.5 கி.மீ.முன்பாகவே ஆற்றை மறிக்கும் வகையில் 9,000 ஏக்கர் பரப்புக்கு ரூ.14,000
கோடியில் 67.16 டிஎம்சி கொள்ளளவுக்கு காவிரி ஆறு இருபுறமும் பிரம்மாண்டமான பாறை மலைகளுக்கு
இடையே ஒரு குறுகிய, மிக ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாய்கிறது.
ஆடுகள் கூட இந்த மலையின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குத் தாண்டிவிடலாம்
என்பதால் தான் இதற்கு “மேகதாது” (ஆட்டின் தாண்டுதல்) என்று பெயர். இந்த அணை
கட்டப்பட்டு 67 டிஎம்சி தண்ணீர் தேங்கும்போது, சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவுள்ள அடர்ந்த
காடுகள் நீரில் மூழ்கும்.
இதில் பெரும்பகுதி காவிரி வனவிலங்கு சரணாலயமும் அதை ஒட்டியுள்ள
அடர்ந்த காப்புக்காடுகள் ஆகும். ஒரு ஏக்கர் அடர்ந்த காட்டில், முதிர்ந்த பெரிய,நடுத்தர
மரங்கள் மற்றும் வளர்ந்து வரும் மரக்கன்றுகள் என அனைத்தும் தோராயமாக 100 முதல் 200
மரங்கள் வரை இருக்கும். தோராயமாக 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மரங்கள் வெட்டப்படவோ
அல்லது நீரில் மூழ்கடிக்கப்படலாம்.
இப்படி 20 லட்சம் மரங்களை வேரோடு சாய்த்தால், அடுத்த சில ஆண்டுகளில்:
அந்தப் பிராந்தியத்தில் காற்றில் ஈரப்பதம் குறையும். பூமியின் வெப்பம் கிடுகிடுவென
உயரும். மேகங்கள் மழையாகப் பொழியாமல் கர்நாடகாவைத் தாண்டி ஓடிவிடும்.
காடுகளை அழித்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்குப் போய்விடும்.
பெய்யும் அரைகுறை மழையும் மண்ணை அரித்துக்கொண்டு போய்விடுமே தவிர, உங்களின் கிணறுகளில்
தண்ணீர் ஊறாது. எனவே, இந்த அணையால் தமிழகத்துக்கு மட்டுமின்றி கர்நாடகத்துக்கும் ஆபத்து
வரும். ஆனால், அதை கண்டுகொள்ளும் நிலையில் கர்நாடகா இல்லை. விவசாயிகளைக் காப்பாற்றுகிறோம்
என்று அணை கட்டத் துடிக்கிறார்கள்.
நீதிமன்றம் இதை தடுத்து நிறுத்திவிடும் என்பதே உண்மை.