Share via:
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (செப்.25) மாலை 3.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நடத்தப்பட்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை எடுத்தார். அதில், ‘‘2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அ.தி.மு.க. இன்று (செப்.25) முதல் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகுகிறது. இந்த முடிவு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு. இந்த தீர்மானத்தை ஒருவர் கூட எதிர்க்காமல் 100 சதவீதம் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது என்னவென்றால், பா.ஜ.க. குறித்து கடுமையான விமர்சனங்களை பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கட்சித் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட அனுமதிமக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கவோ, ஊடகம் நடத்தும் விவாதங்களில் பங்கேற்கவோ கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரே முடிவு செய்வார். எனவே நிர்வாகிகள் அனைவரும் பொறுமையாக இருந்து அமைதி காக்க வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.