Share via:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இன்று நிருபர்களிடம் காவிரி விவகாரம் குறித்தும் பா.ஜ.க.& அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால் உச்சநீதிமன்றத்தில் தனி அதிகாரம் என்னவாகும் என்பதை கர்நாடக அரசு சிந்திக்க வேண்டும்.
அதேபோல் இந்த விவகாரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் நமக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வர வேண்டியுள்ளது. நாளைக்குள் இந்த தண்ணீரும் வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘பா.ஜ.க. கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப் பற்றி நான் கருத்து கூற முடியாது. மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக் கூடாதா என்பது குறித்து அக்கட்சித் தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.