Share via:
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள்
பட்டியல் வெளியாகிவிட்டது. த.வெ.க., அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் சார்பில்,
நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பிரசாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த தேர்தலில் பணம் கொடுத்த திமுக, அதிமுக இந்த இடைத்தேர்தலுக்குப் பணம் கொடுக்கப்போவதில்லை
என்பதால், அவர்களுக்கு ஓட்டு கிடைப்பது சிக்கல் என்கிறார்கள்.
நேற்றைய தினம் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் ஆதவ், ‘’தமிழக வெற்றிக் கழகத்தின் திடீர் எழுச்சியைக் கண்டு திமுகவினர் குழப்பமடைந்துள்ளனர். முன்பு தவெகவை ‘இன்ஸ்டாகிராம் கட்சி’, ‘ஜென் ஸீ கட்சி’, ‘ரீல்ஸ் கட்சி’ என விமர்சித்தார்கள். தற்போது மக்கள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. பணத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை மாற்றி, மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையை மட்டுமே நம்பி தேர்தலை எதிர்கொள்கிறோம். மதுராந்தகம் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறும் நடைமுறையைத் தவெக எதிர்க்கும்.’’ என்று கூறியிருக்கிறார்.
தவெக
தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் ஆதவ் அர் ஜுனா (மதுராந்தகம்), அமைச்சர் அருண்ராஜ் (தாராபுரம்) ஆகியோர் களத்தில் இறங்கி மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த
நிலையில், தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், முதல்வர் விஜய், அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உட்பட 40 பேர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது.
20 நட்சத்திரப் பேச்சாளர்களைக் கொண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த தவெக, வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது. அக்கட்சிக்கு விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. தற்போது இடைத்தேர்தலுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்களை தவெக களமிறக்குவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’தவெக ஆட்சியில் ஓட்டுக்கு பணம்கொடுக்க
முடியாது என்பதால் அதிமுக, திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இதுவரை எல்லா தேர்தலிலும்
ஓட்டுக்கு பணம் கொடுத்தே இரண்டு கட்சிகளும் வெற்றி அடைந்தன. இந்த தேர்தலில் அதற்கு
வாய்ப்பு இல்லை என்பதால் டெபாசிட் வாங்குவதே கடினம்’’ என்கிறார்கள்.

