Share via:
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளரிடம் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி சலுகை அறிவித்துள்ளது.
நாளை (செப்.27) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதுடன் சேர்த்து ஐ.ஆர்.சி.டி.சி. தோற்றுவிக்கப்பட்ட 24வது தினத்தையும் கொண்டாடுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி ‘‘செப்டம்பர் 25 முதல் 27ம் தேதிவரையிலான 3 நாட்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளது.
3 நாட்களுக்கான இந்த சிறப்பு சலுகை மூலம் பயணிகள் சேமிப்பை மேம்படுத்த முடியும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு வங்கி அட்டை பரிவர்த்தனை தள்ளுபடிகளை அறிமுகம் செய்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி. விமான டிக்கெட்டுகளில் ரூ.2 ஆயிரம் வரை சேமிப்பை வழங்குகிறது.
இந்த சலுகைகள் மூலம் 100 நாட்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டுள்ள பயனாளிகள் பயனடையலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.