Share via:
தேர்தல் பிரசாரத்துக்கு வந்த விஜய்க்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது
போலவே, மேட்டூர் அணை திறப்புக்கும் மக்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
இன்று பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வரும் முதல்வர் விஜய்யை
வரவேற்க சேலத்தில் இருந்து வழிநெடுகிலும் கொடிகள், வளைவுகள் கட்டப்பட்டிருந்தன. பட்டுவேட்டி,
பட்டு சட்டையில் அவரது சொந்த வாகனத்தில் வருகை தந்த விஜய்க்கு சாலையின் இரண்டு பக்கமும்
நின்று பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டன.
விஜய்யை வரவேற்று பொன்னியின் புதல்வன், காவிரி மைந்தன் என்றெல்லாம்
அட்டகாச வாசகங்கள் எங்கெங்கும் தென்பட்டன.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம்
12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு
அணையில் நீர் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள்
பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ
சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதனையடுத்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து
கடந்த 4ஆம் தேதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி
அணையின் நீர்மட்டம் 91.15 அடியாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில்
இருந்து திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்னும் சற்று நேரத்தில் மேட்டூர்
அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.
அதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சேலம்
வந்தடைந்த முதலமைச்சர் விஜய், சாலை மார்க்கமாக மேட்டூர் அணையை வந்தடைந்தார்.
இன்னும் சற்று நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா
பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். இன்று முதல் 45 நாட்களுக்கு
அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் 12
ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

