Share via:
மதுரையின் திமுக முகமாக இருந்த மு.க.அழகிரியை கட்சிக்குள் சேர்க்காமல்
தொடர்ந்து புறக்கணித்துவந்தார் முதல்வர் ஸ்டாலின். அதனால் அழகிரியின் ஆதரவாளர்களான
மன்னன், கோபி ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில், இன்று ஜூனியர் விகடன் இதழுக்கு மு.க.அழகிரி மகள் கொடுத்திருக்கும் பேட்டி
அரசியலில் பெரும் புயலை உருவாக்கியிருக்கிறது.
அந்த பேட்டியிலிருந்து சில கேள்விகள் மட்டும் இங்கே..
“அழகிரி இப்போது எப்படி இருக்கிறார்… தேர்தல் நிலைமைகளை
கவனிக்கிறாரா?”
“அவர் பார்க்காத நெருக்கடி இல்லை. அதனால அவ்வளவு சீக்கிரம் சோர்ந்துபோயிட
மாட்டார். தேடி வர்ற கட்சிக்காரங்களைச் சந்திக்கிறார். நல்லது, கெட்டதுக்குப் போறார்.
தேர்தல் நிலவரங்களைக் கூர்மையா கவனிக்கிறார். எப்பவுமே வேட்பாளர் தேர்வைவைத்தே அவர்
வெற்றி, தோல்வியைச் சொல்லிடுவார். இந்த முறை வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள்
அப்பாவை சங்கடமாக்கிடுச்சு. மூத்த நிர்வாகிகள் எதையுமே தட்டிக் கேட்டுடக் கூடாதுன்னு
அவங்களுக்கே சீட் உண்டா, இல்லையாங்கிற நிலைமையை உருவாக்கினாங்க. வேட்பாளர்கள் அறிவிப்பு
மூலமா, ‘சபரீசனும் உதயநிதியும்தான் கட்சி’ங்கிறதை அப்பட்டமா நிறுவினாங்க. கட்சிக்குள்
இப்படிப் பல சங்கடங்கள்… இப்போதைக்கு தம்பி துரை தயாநிதி உடல்நலம் தேறிவர்றதுதான் அப்பாவுக்குப்
பெரிய நம்பிக்கை. அப்பாவோட போராட்டம்தான் தம்பியை மீட்டுக் கொண்டுவந்திருக்கு.
இயல்பாகவே அப்பா எதையும் தாங்கிக்கிற சக்திகொண்டவர். அம்மாதான்
அவர் இப்படி இருக்கிறதைப் பார்த்து வருத்தப் படுறாங்க. துர்கா சித்தியும் அம்மாவும்
இப்பவும் ரொம்ப நெருக்கம். குலதெய்வக் கோயிலுக்குச் சில மாதங்களுக்கு முன்னாலகூட ஒண்ணா
போனாங்க. ஆனாலும் சித்திகிட்ட அப்பா சம்பந்தமா அம்மா பேசலை. ‘அப்பா கோடிப் பேருக்கு
நல்லது செய்யிற மனுஷன். இயல்பாவே அவருக்கு நல்லது நடக்கும்’ங்கிற நம்பிக்கையில் அம்மா
அமைதியா இருந்துட்டாங்க. இந்த மாதிரி தேர்தல் நேரங்கள்ல அம்மாவால் காபி போட்டுக் கொடுத்து
மாள முடியாது. வீட்ல அவ்வளவு கூட்டம் அலைமோதும். 75 வருட அனுபவம்கொண்ட கூடப் பொறந்த
அண்ணனை இப்படி வீட்டோட முடக்கி வெச்சிருக்கோமேன்னு சித்தப்பாவுக்குத் தோணலை. கட்சி
வேட்டி கட்ட முடியாம அப்பா தத்தளிக்கிற தவிப்பு சித்தப்பாவுக்குப் புரியலை. ‘அண்ணன்
நான் இருக்கிறேன்’னு பெண்கள் மத்தியில் சித்தப்பா பிரசாரம் பண்றார். ஆனா, சொந்த அண்ணனுக்கே
அவர் பக்கபலமா இல்லையே…”
“கட்சியில் மறுபடியும் சேர்த்துக்கச் சொல்லி ஸ்டாலினிடம்
அழகிரி பேசியிருக்கலாமே?”
“அப்பா ஒருபோதும் தனக்காகப் பேசமாட்டார். அ.தி.மு.க-வோட கோட்டையா
இருந்த தென் மண்டலத்தை தி.மு.க பக்கம் கொண்டுவந்தது அப்பாதான். அதை யாராலயும் மறுக்க
முடியாது. இன்னிக்கு கன்னியாகுமரி வேட்பாளரா மகேஷ் நிறுத்தப்பட்டிருக்கார். மகேஷ் நல்ல
உழைப்பாளின்னு கண்டுபிடிச்சது யாரு… அப்பாதான் மகேஷை அடையாளம் காட்டினார். தாத்தாவாலேயே
‘எலெக்ஷன் கிங்’னு கொண்டாடப்பட்ட அப்பா, இன்னிக்கு அமைதியா இருக்கார். இரக்கத்தின்
அடிப்படையில் அப்பா எதையும் எதிர்பார்க்க மாட்டார். அவர் கேட்கிறது உரிமை. ‘அவங்களா
அழைச்சா போகலாம்’கிறதுதான் அப்பாவோட மனநிலை. மதுரை வீட்டுக்குச் சித்தப்பா வந்தப்பக்கூட
தன்னைக் கட்சியில் சேர்த்துக்கிறது சம்பந்தமா அப்பா பேசலை. தன்னோட ஆதரவாளர்களைக் கட்சியில்
சேர்த்துக்கச் சொன்னார். அப்போதைக்கு சித்தப்பா தலையாட்டிட்டுப் போனாரே தவிர, எதையும்
செய்யலை. இப்போ மன்னன் அண்ணன் உள்ளிட்டவங்க அ.தி.மு.க-வில் சேர்ந்துட்டாங்க. அப்பாவைத்
தனிமரமா நிற்க வெக்கணும்னு சித்தப்பா நினைச்சார். அதைச் சாதிச்சிட்டார்…”
“அழகிரி களத்துக்கு வராதது தி.மு.க-வின் வெற்றியை
பாதிக்கும்னு நினைக்கிறீங்களா?”
“அப்பா களத்தில் இருந்தால் அந்த வேகமே வேற… தேர்தல் நேரத்திலாவது
அப்பாவை அவங்க பயன்படுத்தி யிருக்கலாம். தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை சித்தப்பா
`சூப்பர்ஸ்டார்’னு சொல்றார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளைச் சொல்லாமல்,
`எட்டாயிரத்துக்கு கூப்பன் கொடுப்போம்’கிற மலினமான வாக்குறுதி எப்படி சூப்பர்ஸ்டாராகும்…
`நீட்டை ஒழிப்போம்’னு சொன்ன வாக்குறுதி என்னாச்சு… உதயநிதி போன தேர்தலில் செங்கல்லைத்
தூக்கிட்டு திரிஞ்ச மாதிரி இந்தத் தேர்தலில் எடப்பாடியாரோட போட்டோவைத் தூக்கிட்டு திரியிறார்.
என்னதான் இருந்தாலும் எடப்பாடியார் முன்னாள் முதல்வர். அவரைப்போய் தவழ்ந்தவர், காலில்
விழுந்தவர்னு உதயநிதி பரிகாசம் பண்றது தப்பில்லையா?”
“எடப்பாடி பழனிசாமியும் அவதூறான வார்த்தைகளைத்தானே
பயன்படுத்துகிறார்?”
“அவரை அப்படிப் பேசத் தூண்டியது யார்… சசிகலா அம்மையாரின் காலில்
விழுந்து வணங்கியதைத் தவறாகச் சித்திரிப்பதன் மூலமா நீங்க என்னத்தை நிறுவப்பார்க்குறீங்க…
இதுதான் பெண்களுக்கு நீங்க குடுக்குற மரியாதையா… நிர்வாகம், செயல்பாடு, திட்டங்கள்,
வாக்குறுதிகளைப் பற்றிப் பேசாமல் தனிநபர் தாக்குதலை முதலில் யார் ஆரம்பிச்சது… உதயநிதியின்
பக்குவம் இல்லாத பேச்சை சித்தப்பாவும் என்கரேஜ் பண்ணிட்டார். போதாக்குறைக்கு கனிமொழி
அத்தையும் மலர் வளையம் வெப்போம்கிற மாதிரி பேசிட்டாங்க. தாத்தா கலைஞர் மட்டும் இப்போ
இருந்திருந்தால் நிச்சயமா இந்த மூணு பேரையும் கண்டிச்சிருப்பார். நான் ஒரு வார இதழுக்குக்
கொடுத்த பேட்டியில் ‘மருத்துவர் ராமதாசு’ன்னு சொல்லிட்டேன். அதுக்காக, ‘மூத்த தலைவரை
நீ எப்படி பெயர் சொல்லிப் பேசினே?’ன்னு திட்டி, மருத்துவரய்யாகிட்ட என்னை மன்னிப்புக்
கேட்க வெச்சார் தாத்தா. அவரோட வழியில் வந்துட்டு இவ்வளவு தரம் தாழ்ந்த விமர்சனங்களை
எங்க குடும்பத்து ஆட்கள் பேசியிருக்கக் கூடாது…”
“அ.தி.மு.க-வில் சேரப் போறீங்கபோலிருக்கே?”
“தேர்தல் நேரத்தில் கண்டதையும் பேசி, துண்டு போடுற ஆள் நான் இல்லை.
அ.தி.மு.க-வில் சேர நினைத்தாலே, அது என் தாத்தாவுக்கு நான் செய்கிற துரோகம். இப்பவும்
தி.மு.க-வுக்கு எதிரா நான் பேசலை. கூட்டணி பலமும், பெரிய அளவுக்கான எதிர்ப்பற்ற தன்மையும்
தி.மு.க-வைத் திரும்பவும் ஆட்சிக்குக் கொண்டுவர்றது மாதிரிதான் இருந்தது. ஆனா, விஜய்
வந்த பின்னால் நிலைமையே வேற… களத்தில் விஜய் விளையாடுறார். நிச்சயம் கணிசமான வாக்குகளைப்
பிரிப்பார். தி.மு.க அவரைக் குறைச்சு எடைபோடுது. அவர் பிரிக்கிற ஓட்டு தி.மு.க-வின்
வெற்றியைத் தவிடுபொடியாக்கும். விஜய்யால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு ஆட்சிகூட
அமையலாம். இந்த மாதிரியான சூழலில் அப்பாவையும், சீனியர் நிர்வாகிகளையும் அனுசரிச்சு,
அவங்களோட அனுபவத்தைப் பயன்படுத்தி சித்தப்பா ஜெயிக்க நினைக்கணும். அதைச் செய்யாமல்
சர்வாதிகாரமாச் செயல்படுறது தி.மு.க-வின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும். இதே ஆதங்கம்
கட்சியின் சீனியர்கள் பல பேர்கிட்ட இருக்கு.”
“இந்த நிமிடம் வரை நீங்கள் தி.மு.க உறுப்பினர். மகளிரணியின்
பிரசாரக்குழுச் செயலாளராகவும் இருந்தவர். நீங்கள் இப்படிப் பேசுவது கட்சி விரோதம் இல்லையா?”
“அப்பாவைச் சிங்கமா பார்த்தவங்க என்னை சிங்கத்தோட குட்டியாத்தானே
பார்ப்பாங்க… அதனால, நான் கட்சியில் இருந்தாலும், எந்த நிகழ்வுக்கும் அழைக்காமல் புறக்கணிச்சாங்க.
இப்படி மனசுல பட்டதைப் பேசுறதால இனி குடும்ப நிகழ்வுகளுக்கும் கூப்பிடாமல் புறக்கணிப்பாங்க.
அவ்வளவுதான்! இதைத் தாண்டி கட்சிரீதியான நடவடிக்கை எடுத்தால், பார்த்துக்கலாம். இத்தனை
வருஷமா அமைதியா வாய் திறக்காமல் எங்க அப்பா இருக்கார். அவரோட அமைதிக்கும் தன்மைக்கும்
நியாயம் கிடைச்சுதா… அப்பா அப்படி என்ன தப்பு பண்ணினார்… இந்தக் கட்சிக்காக அப்பா
பட்ட உழைப்பை யாராச்சும் மறுக்க முடியுமா… சூறாவளியா பறக்குற மனுஷன் வீட்டுக்குள்ள
உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்க சக்தி இல்லை. அந்த ராமனுக்கே 14 வருஷம்தான் வனவாசம்.
எங்க அப்பாவை அவங்க ஓரங்கட்டி இதோட 15 வருஷம்!”
