Share via:
உடல் உறுப்பு தானம் செய்த தேனியைச் சேர்ந்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட உள்ளது.
சாலை விபத்து உள்ளிட்ட காரணங்களால் மூளைச்சாவு ஏற்படுபவர்களின் குடும்பத்தார் பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளை சமீப காலமாக தானமாக அளித்து வருகின்றனர். அதன்படி உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது உடல்உறுப்பு தானம் செய்பவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த 37 வயதான வடிவேலு என்பவர் கடந்த 23ம் தேதி சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. முதலமைச்சரின் உத்தரவுப்படி வடிவேலுவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் இன்று (செப்.26) நடக்க உள்ளது.
இது குறித்து அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த தேனி சென்று கொண்டிருக்கிறோம். இன்று முதல் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது’’ என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுதலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.