Share via:
யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று மேடையில் விஜய் தில்லாகப்
பேசினார். இப்போது அவரது கட்சி நிர்வாகிகளுக்கு புதுக்கோட்டை விஜயபாஸ்கர் லஞ்சமாக கார்
வாங்கித்தர இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
விஜய் கட்சியில் இணைந்ததும் மாவட்டச் செயலாளர் பதவி அல்லது அதற்கு
இணையான பதவி வழங்கப்படும் என்று நினைத்தே அதிமுக மாஜிக்கள் பலர் ஓடோடி போய் இணைந்தார்கள்.
ஆனால், எல்லோருக்கும் விஜய் அல்வா கொடுத்துவிட்டார். இதுவரை யாருக்கும் எந்த பதவியும்
கொடுக்கவில்லை. அது மட்டுமின்றி, யாருக்குமே விஜய் எந்த உறுதியும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மீது ஒரு புதிய பஞ்சாயத்து
கிளம்பியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட
அதிமுக வேட்பாளர் தன. விமலிடம் இருந்து ரூ.4.50 கோடியை வாங்கிக் கொண்டு முன்னாள்
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏமாற்றி விட்டார் என அதிமுக மாவட்டச் செயலாளர் வி.பழனிவேல்
குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில், ‘’அதிமுகவில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை
பயன்படுத்தி சம்பாதித்த சி.விஜயபாஸ்கர், தவெகவினருக்கு கார் வாங்கிக் கொடுக்க
இருப்பதாகத் தகவல் வருகிறது. இதற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? விமலிடம்
இருந்து வாங்கிய பணத்தை அவர் திருப்பித்தர வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.
தவெகவினருக்கு கார் வாங்கிக்கொடுத்து எப்படியாவது பதவி வாங்கிவிடலாம்
என்று விஜயபாஸ்கர் முயற்சி செய்துவரும் நிலையில், மற்ற மாஜிக்கள் என்ன செய்வது என்று
தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி ஆகியோருடன் முன்னாள் எம்பி இளவரசன் மற்றும் சுந்தர்ராஜ், ராஜமுத்து, ராஜவர்மன், பன்னீர்செல்வம், முருகன், என். சிவா போன்ற முன்னாள் எம்.எல்.ஏ–க்கள் தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் என 8 முன்னாள் அமைச்சர்கள், 1 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏ–க்கள் தவெகவில் இணைந்தனர்.
இந்த
தலைவர்களுக்கு இதுவரை எந்தவொரு உட்கட்சிப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. மாநில அளவிலோ, மண்டல அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ புதிய நிர்வாகிகளுக்கான பதவிகள் எதையும் தவெக தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. இடைத்தேர்தலுக்குப் பிறகே மாற்றம்
நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
எனவே, அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் கதிகலங்கி நிற்கிறார்கள்.
இந்த நிலையில் விஜயபாஸ்கர் கார் வாங்கிக்கொடுத்து பதவி பெற முயற்சி செய்வது விஜய் காதுக்குப்
போய்விட்டது.
லஞ்சத்தை விஜய் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்களா..? விஜய் அனுமதிப்பாரா?