Share via:
காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில்
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகம் சென்று, அங்கு
முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவிருக்கிறார்.
கர்நாடகாவுக்கு விஜய்யுடன் செல்லும் பிரதிநிதிகள் குழு பற்றிய
பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் செல்கிறார்கள். மேலும், தலைமைச் செயலாளர், முதல்வரின் முதல் இரண்டு செயலாளர்கள், தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி ஆகியோருடன் முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி. நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர் & காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆகியோர் செல்கிறார்கள்.
கர்நாடகாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முதல் முதல்வர்
விஜய் என்று தவெகவினர் கூறுவது உண்மை இல்லை, எம்.ஜி.ஆர். ஏற்கெனவே முயற்சி செய்திருக்கிறார்.
1980களில் நிலவிய கடுமையான வறட்சி மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடியைக்
காப்பாற்றுவதற்காக 1986 ஜனவரி மற்றும் 1987 பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்கள் கர்நாடக
முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, அவரது அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர்களை
பெங்களூருக்கு அனுப்பியிருந்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதைத்தொடர்ந்து
1986 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி, புதுச்சேரி முதல்வர் ஃபாரூக் மருக்காயருடன் எம்.ஜி.ஆரும்
கர்நாடகத்துக்குச் சென்று அம்மாநில முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவைச் சந்தித்தார்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, கர்நாடகத்துக்குச் சென்று
அம்மாநில முதல்வர்களாக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் குண்டு ராவை சந்தித்து, காவிரி
நீர் திறக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதன்பின் வந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி
ஆகியோர் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நீருக்கான உத்தரவுகளை பெற்றனர்.
இந்த வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில், டி.கே. சிவகுமார் – விஜய்
சந்திப்பில் காவிரி நீர் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர், ‘’கர்நாடகாவுக்குச் சென்று
பேச்சுவார்த்தை நடத்தும் முதலமைச்சர் விஜய்யின் முடிவு முட்டாள்தனத்தின் உச்சம். உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நடுவர் மன்றம் வலியுறுத்தியும் கேட்காத கர்நாடக முதலமைச்சர்
சிவக்குமார், விஜய் கூறியதும் கேட்டுவிடுவாரா? சட்டத்திற்குக் கட்டுப்படாத கர்நாடக
அரசு, பேச்சுவார்த்தைக்குப் பணிந்து வருமா?
காவிரிச்சிக்கலுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வை எட்ட முடியாது
எனும் நிலையை எட்டியப் பிறகுதான், நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, பல கட்டப் படிநிலைகளைக்
கடந்து வந்திருக்கிறோம். இவ்வளவு ஆண்டுகாலமாகப் போராடித் தக்க வைத்திருக்கும் குறைந்தபட்ச
உரிமைகளையும் மொத்தமாகத் தாரைவார்க்கப் போகிறது கேடுகெட்ட தவெக அரசு.’’ என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவேளை தண்ணீருடன் விஜய் வந்துவிட்டால், அவரது மாஸ் இன்னமும்
அதிகரித்துவிடும். அப்படி நடக்கட்டும் என்றே எதிர்பார்ப்போம்.