Share via:
பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு& கர்நாடகம் இடையே பலத்த மோதல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு, தங்களிடம் போதுமான நீர் இல்லை என்று கர்நாடக அரசு மறுத்துவிட்ட நிலையில் தமிழக அரசின் மனு கடந்த 21ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது காவிரி மேலாண்மை பிறப்பித்துள்ள உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (செப்.26) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடக்கிறது.
போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு அடைப்பின் காரணமாக பேருந்து, ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்டவை ஓடவில்லை. அதேபோல் திரையரங்குகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் முக்கிய தேவையான பெட்ரோல் பங்குகள் கூட மூடப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.