Share via:
நேற்றைய நள்ளிரவில் பிரதமர் மோடி காணொளி வெளியிட்டுப் பேசிய விவகாரத்திற்கும்,
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதற்கும் முடிச்சுப் போட்டு
போராட்டக் குழுவினர் ஆவேசம் காட்டுகிறார்கள். போராடும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து
ஏற்படும் என்று மிரட்டப்பட்டு உண்ணாவிரதம் வாபஸ் வாங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள்
போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சமூக
ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
பிரதமர் மோடி நேற்று நள்ளிரவில் வெளியிட்ட காணொளியில், “வினாத்தாள்
கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை
வழங்கும் வகையிலான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும். வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்
இதனை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும்.” என்று பேசினார்.
இதையடுத்து ஜே.பி.நட்டா உள்ளிட்ட அமைச்சர்கள் சோனமை நேரில் சந்தித்து
அரசின் முடிவை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை
முடித்துக்கொண்டார். வன்முறையைக் காரணம் காட்டி மிரட்டப்பட்டதாக பேச்சு எழுகிறது.
இந்நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி., ‘’ஐந்தாவது நாளாக ஒத்திவைப்பு
தீர்மானத்தைத் தாக்கல் செய்கிறோம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப்பேசி வீடியோ வெளியிடும்
பிரதமர் அவர்களே, காலை பதினொரு மணிக்கு மக்களவையில் பேச வாருங்கள். பொறுப்பேற்பிலிருந்து
தப்பிக்கவும், உங்கள் அமைச்சரைக் காப்பாற்றவும் இன்னும் எத்தனை குறுக்கு வழிகளைத்தான்
தேர்வு செய்வீர்கள்? எல்லாத் தேர்விலும் பிழை செய்கிறீர்கள். இப்பொழுது உங்கள் தேர்வுத்தாளை
மாணவர்கள் திருத்திக் கொண்டிருக்கிறார்கள்…’’ என்று காட்டம் காட்டியிருக்கிறார்.
இனி போராட்டம் குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித்
தீப்கே, “மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்கும்
வரை இந்தப் போராட்டம் முடிவுக்கு வராது. தலைவர்கள் பேச்சுவார்த்தைக்காக ஜந்தர் மந்தருக்கோ
அல்லது ஒரு பொது இடத்துக்கோ வர ஒப்புக்கொண்டால் ஒழிய, அரசைச் சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை…’’
என்று உறுதியாகக் கூறுகிறார்.