Share via:
தேர்தல் காலத்தில் ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையில்
நடந்த குடும்ப சண்டைக் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது. ராமதாஸை ஒட்டுமொத்தமாக அரசியலில்
இருந்தே அன்புமணி விரட்டிவிட்டார். இதையடுத்து 88வது பிறந்த நாளில் தன்னுடைய அரசியல்
துறவறத்தை ராமதாஸ் அறிவித்துவிட்டார்.
இத்தனை நாட்களும் ராமதாஸை நம்பி அவருடன் நின்ற சீனியர் நிர்வாகிகள்,
முன்னாள் எம்பி, எம்எல்ஏ என்று அனைவரையும் நடுத்தெருவில் நிற்க வைத்து மீண்டும் ஒரு
துரோகத்தை நிகழ்த்திவிட்டார் என்று அவரை ஆதரித்தவர்கள் புலம்புகிறார்கள்.
ராமதாஸின் அரசியல் பயணம் சுவாரஸ்யமானது. சைக்கிளில் பயணம் தொடங்கிய
ராமதாஸ் இப்போது இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறியிருப்பதே அவரது அரசியல்
சாதனை.
ராமதாஸ் பற்றி சிறுகுறிப்பு.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள கீழ் விசிறி கிராமத்தை
சேர்ந்தவர் ராமதாஸ். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற ராமதாஸ் சொந்தமாக
க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய
மக்களுக்கு வழங்கினார்.
வன்னியர் சமுதாயத்தின் ஏழ்மை நிலையை அகற்றி கல்வி, வேலைவாய்ப்பு,
பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று எண்ணினார். பின்னர்
வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து, வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1980-ல் தொடங்கினார்.
வன்னியர் சமுதாய முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.
கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று
கோரி ஈரோட்டில் 1980 ல் மாநாடு ஒன்றை நடத்தினார். அவர் நடத்திய இந்த மாநாடு, தமிழகத்தையே
திரும்பி பார்க்க வைத்தது.
வன்னியர் சாதியினருக்கும் மாநிலத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு,
மத்தியில் 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீட்டை18
சதவீதத்தில் இருந்து 22 ஆக உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு வாரம்
தொடர் போராட்டம் நடத்தினார். இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஸ்தம்பித்தன. அப்போது
நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 21 பேர் மரணமடைந்தனர். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இந்த
போராட்டம் நடைபெற்றது.
பின்னர் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வன்னியர் சமுதாயத்துடன்
சேர்த்து 108 சமுதாயங்களை ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ என்ற புதிய பட்டியலில் இணைத்து
20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுவரை தேர்தலை சந்திக்காமல் இருந்த வன்னியர்
சங்கம் 1989 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 33 இடங்களில் போட்டியிட்டு
அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் கட்சி தொடங்கிய சில மாதங்களில் 15 லட்சத்துக்கும்
அதிகமான வாக்குகளைப் பெற்று அதாவது 6% வாக்கு வங்கியை பெற்று தமிழக அரசியல் களத்தை
திரும்பி பார்க்க வைத்தது. அதன் பிறகு தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல்
சக்தியாக பாமக உருவெடுத்தது.
தேர்தல்களில் பாமக 1991 – 1996 லோக்சபா தேர்தல்களிலும் அக்கட்சிக்கு
தோல்வியே மிஞ்சியது. ஆனாலும் அக்கட்சி படிப்படியாக வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டே
வந்தது. தவிர்க்க முடியாத சக்தியாக தமிழக அரசியலில் உருவெடுத்த பாமக. 1991ம் ஆண்டு
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, பண்ருட்டி தொகுதியில் வென்றது. 1996
ம் ஆண்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
2001-ல் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்டது.
இதில், 20 இடங்களில் வெற்றி பெற்றது. 2006 ஆம் ஆண்டு திமுக பக்கம் தாவிய பாமக 34 இடங்களில்
போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கை
கோர்த்தது. திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் பாமக 3 இடங்களில் மட்டுமே வென்றது.
2016 ஆம் ஆண்டு தேர்தலில், பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில்
அனைத்திலும் தோல்வி அடைந்தது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
23 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட 5ல் மட்டுமே வென்றது.
கடந்த தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணியிலேயே இருந்த பாமக 5
ல் வென்றது. மதுக்கடைகளை மூட போராட்டம் தமிழக அரசியலில் வட மாவட்டங்களில் திராவிட கட்சிகளுக்கு
ஆட்டம் காண வைத்த அரசியல் சக்தியாக பாமக நிலவியது.
அரசியலில் போட்டியிடுவது எங்கள் இலக்கு அல்ல என்று கூறி பின்னர்
பாமக என கட்சி ஆரம்பித்து போட்டியிட்டதும், குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்
எனக் கூறிவிட்டு மகன் அன்புமணியை கட்சியில் முன்னிறுத்தியதும், சாதி அரசியல், கூட்டணி
மாற்றம் என அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்து வந்த ராமதாஸ் தனது 88வது பிறந்தநாளில்
அரசியல் துறவறத்தை அறிவித்துள்ளார்.
அன்புமணிக்கு சபாஷ்.