Share via:
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னரே நயினார் நாகேந்திரனை டெல்லி பாஜக மாற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த மாற்றத்துக்கான அறிகுறியும் தென்படவில்லை. ஆகவே, இப்போது வானதி சீனிவாசன் நேரடியாக டெல்லிக்கு நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலைக்குப் பிறகு, சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்து அதிக சீட் வாங்க முடியாதது, வாங்கிய இடங்களிலும் வெல்ல முடியாதது போன்றவை அவர் மீது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. இவரது நியமனத்தாலே அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
அதனால், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனை மாநிலத் தலைவராகக் கொண்டு வந்தால் கட்சிக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து மேலிடப் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். மாற்றம் நடந்துவிடும் என்று வானதி சீனிவாசன் காத்திருந்த நிலையில், எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
அதனால், இப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து நெருக்கடி கொடுத்துவருகிறாராம். இடைத்தேர்தல் வருவதற்குள் தலைமை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், தமிழிசை செளந்தரராஜனும் இந்த பதவிக்கு கடும் முயற்சி எடுத்துவருகிறார். நயினாரும் தக்கவைக்கும் முயற்சியை செய்துவருகிறார். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
