Share via:
மறைந்த ஜெயலலிதா எனது அம்மா என்று ஜெயலட்சுமி என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்று பகிரங்கமாக தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மறைந்த அ.தி.மு.க.முதல்வர் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் தன்னை செல்வி.ஜெயலலிதா என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். இருப்பினும் தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார். திரைத்துறையைத் தாண்டி தனி ஒரு பெண்ணாக அ.தி.மு.க.வை கட்டுக்கோப்புடன் கண் அசைவில் கட்டிவைத்திருந்த பெருமை என்றென்றுமே ஜெயலலிதாவையே சாரும்.
திரையுலகில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் சோபன்பாபுவை ஜெயலலிதா காதலித்தார் என்று ஒரு சிலரும், சோபன்பாபுவை அவர் திருமணம் செய்து கொண்டார் என்று சிலரும், இவர்களுக்கு பிறந்த குழந்தை ரகசியமாக வளர்க்கப்பட்டு வருகிறது என்றும் பல வதந்திகள் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே சொல்லப்பட்டு வந்தன. இருப்பினும் அவை எதுவும் உரத்த குரலுடன் வெளிப்பட்டது கிடையாது.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஒவ்வொருவராக நான் ஜெயலலிதாவின் மகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், ஜெயலலிதாவின் சொத்தை அபகரிக்கவும் திட்டமிட்டு களமிறங்கியுள்ளனர்.
இந்தநிலையில் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என்று ஜெயலட்சுமி என்ற பெண் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்குவேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஜெயலட்சுமி, கண்டிப்பாக அவரின் வாரிசாக இருக்கமாட்டார் என்று வியூகங்கள் உலா வருகின்றன. ஒரு வேளை ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் மகளாக இருக்கும் பட்சத்தில், எப்படி தன்னை பெற்றெடுத்த தாய்க்கு இப்படிப்பட்ட அவப்பெயர் சம்பாதித்துக் கொடுப்பார் என்றும் கேள்வி எழுகின்றன.
மேலும் ஜெயலட்சுமி புதிய கட்சி தொடங்கி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று கூறியது வியப்பின் உச்சம். ஒரு கட்சி தொடங்குவது என்றால் விளையாட்டான காரியமல்ல. அப்படியென்றால் ஜெயலட்சுமியின் பின்பலமாக இருந்து செயல்படுவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுகிறது.
ஒரே போன்ற முக சாயலில் இருந்தால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துவிட முடியுமா என்ன?
அ.தி.மு.க. என்ற கோட்டையை தான் கண்மூடும் வரை கட்டிக்காத்த ஜெயலலிதாவின் நற்பெயரை அவரின் விசுவாசிகள் காப்பாற்றாமல் வாய்மூடி வேடிக்கை பார்க்கிறார்களோ தெரியவில்லை. இந்த செயல் ஜெயலலிதாவின் அபிமானிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
ஜெயலலிதா இயற்கையாக உயிரிழக்கவில்லை என்பது குறித்து எழுந்த புகாரின் பெயரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நிலையில், இது என்ன புதிய தலைவலி என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அ.தி.மு.க.வில் இரட்டைக்குழல் துப்பாக்கியில் இருந்து ஒற்றை தலைமை என்று ஆகிய விவகாரம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் என பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
மேலும் அ.தி.மு.க.வை எப்படியும் கைப்பற்றி காப்பாற்றியே தீருவோம் என்று ஒருபுறம் சசிகலா சூளுரைத்துக் கொண்டிருக்கிறார். இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எப்போது என்பது தான் ஜெயலலிதாவை கட்சித் தலைவியாகவும், காவியத் தலைவியாகவும் மதித்துக் கொண்டிருக்கும் தொண்டர்களின், ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.