Share via:
செங்கோட்டையனுக்கு கோவை விமானநிலையத்தில் கிடைத்த வரவேற்புக்கு
பதிலடி கொடுப்பது போன்று கோபி சட்டமன்றத் தொகுதியில் பிரமாண்டமான கூட்டத்தைக் காட்டி
மிரட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனை அம்பலப்படுத்தியதும், ஸ்டாலினுக்கு
சவால் விட்டதும் பரபரப்பாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய இபிஎஸ், ‘’எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப்
படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்!
2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித்
திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும்.
இந்த தொகுதியில் ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஓட்டு வாங்குவதற்கு
உங்களிடம் வந்தார். ராஜினாமா செய்வதற்கு உங்களிடம் கேட்டாரா? இனி, அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
அதிமுக ஆட்சியில் கோபி தொகுதி எடப்பாடி தொகுதிக்கு மேலாக வளர்ச்சியடைந்து, தமிழகத்தில்
முதல் தொகுதியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுகவில் நீக்கப்பட்டவரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது
என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக நீக்கப்பட்டவர்களோடு
செங்கோட்டையன் செல்கிறார். எனவே, அவர் இனி இங்கு தொடர லாயக்கற்றவர் என்பதாலே அடிப்படை
உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினோம். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடவடிக்கை
எடுக்கவில்லை. அவர் திட்டமிட்டு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இயக்கத்தில் இருந்துகொண்டே,
இயக்கத்துக்கு துரோகம் விளைவித்தார்.
நான் விவசாயிகளின் பச்சை துரோகி என்று ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே… விவசாயம்
பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நான் வருகிறேன், நீங்களும் வாருங்கள். பயிர்களை உங்கள்
முன் வைக்கிறேன், அது என்ன பயிர் என்று சொல்லிவிடுங்கள் பார்க்கலாம். என்ன பயிர் என்றும்
தெரியாது, தானியமும் தெரியாது. அப்படிப்பட்டவர் என்னை பச்சைத்துரோகி என்கிறார்.
டெல்டாவில் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின, நான் ஓடோடிச் சென்று
பார்வையிட்டேன். மக்கள் பிரச்னை என்றால் முதலில் போகும் கட்சி அதிமுக. முதல்வர் திரைப்படம்
பார்க்கச் செல்கிறார், விவசாயிகளை பார்க்க அவருக்கு நேரமில்லை. தலைமைச் செயலகத்தில்
அழுகிப்போன பயிர்களை டிரேயில் வைத்து காட்டுகிறார்கள். இவரா மக்கள் முதல்வர்..? இந்தியாவிலேயே இப்படிப்பட்ட முதல்வர் யாருமில்லை…’’
என்று சவால் விட்டிருக்கிறார்.
இதற்கு ஸ்டாலின் பதில் சொல்வாரா..?
