Share via:
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்’
பெயர் “மக்கள் பவன்” என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதை அரசியல் விளையாட்டு
மட்டுமே என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள்
‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின்
மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என நீண்ட
நாட்களாகவே கூறி வந்தார். ஆர்.என்.ரவியின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்
கொண்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்கள் இனி ‘லோக் பவன்’ என்றும், ராஜ்
நிவாஸ்கள் ‘லோக் நிவாஸ்’ என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம்
செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தமிழில்
மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதனை ஸ்டாலின், ‘’சிந்தனையிலும், செயலிலும் மாற்றமில்லை
எனில் பெயர் மாற்றம் தேவையற்றது. பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை! சட்டமன்றம்
= மக்கள் மன்றம். சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர்
மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும்
மதிப்பதுதான் இப்போதைய தேவை’’ என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து திமுகவினர், ‘’மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள் கிரீன்வேஸ்
சாலையில் அரசு குடியிருப்புகளில் தங்கிப் பணியாற்றுவது போல் நானும் பணியாற்றத் தயார்
என்று சொல்லியிருப்பாரேயானால் அதற்குப் பெயர் தான் லோக் பவன். சென்னை மாநகரின் நடுவிலே
ஒரு வனம். அந்த வனத்துக்குள்ளே குறைந்தது 200 பேர் தங்குவது போல ஒரு மாளிகை.
இது போதாதென ஊட்டியிலும் இதே அளவில் ஒரு மாளிகை. இந்தச் சொகுசில்
ஒரு துளியைக் கூட குறைத்துக் கொள்ளத் தயாரில்லாத ஆளுநர் அதன் பெயரை ராஜ்பவன் என்றில்லாமல்
லோக் பவன் அதாவது மக்கள் இல்லம்னு மாத்தறாராம். இதை ஒரு சாதனையாகச் செய்திருக்கிறார்.
இனிமேல் என்ன தமிழ்நாட்டு மக்கள் அதை சத்திரம் சாவடி போல் பயன்படுத்திக்கொள்ள விடப்போகிறாரா?
மக்களை எவ்வளவு மடையர்களாக நினைத்தால் இப்படியான கோமாளிக்கூத்துகளை எல்லாம் செய்யத்
தோன்றும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
