Share via:
தமிழகத்தில் ரோட் ஷோ நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் புதுவையில்
எப்படியும் அனுமதி பெற்றுவிடலாம் என்று புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்
முடிந்திருக்கிறது.
திமுகவின் முகத்தில் கரியைப் பூசுவது போன்று புதுவையில் ரோடு ஷோ
நடத்த தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். புதுச்சேரி காலாப்பட்டில்
தொடங்கி கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம்
வாட்டர் டேங்க் அருகில் மைக்கில் பேசவும் அனுமதி கேட்டார்.
புஸ்ஸி ஆனந்த் மூலம் இதற்கு கண்டிப்பாக அனுமதி கிடைத்துவிடும்
என்று குஷியாக இருந்தனர். இதற்காக தவெக நிர்வாகிகள்,
முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனாலும் ரங்கசாமி அனுமதி கொடுக்கவில்லை.
எனவே தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, முன்னாள்
எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோர் சீனியர் எஸ்பி கலைவாணனை சந்தித்து ரோடு ஷோவுக்கு அனுமதி
கேட்பதற்காக உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் எஸ்பி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு
எஸ்.பி. இல்லை என்றதும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா இருவரும் முதல்வர் ரங்கசாமியை
அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க கேட்டு கோரிக்கை
வைத்தனர். அதை அவர் ஏற்கவில்லை.
விஜய்யின் ரோட் ஷோவிற்கு அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால்,
பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்திருக்கிறது. புதுச்சேரியில் தமிழகம் போல் பெரிய சாலைகள்
கிடையாது. குறுகலான சாலைகளே உள்ளன. அதுமட்டுமில்லாமல் அவர்கள் கேட்ட சாலை என்பது மக்கள்
நடமாட்டம் அதிகமுள்ளதும் கூட. பெரிய இடத்தில் பொதுக்கூட்டம் வேண்டுமானால் நடத்தலாம்.
பொதுக்கூட்ட மைதானத்தில் திரட்டலாம். ரோட் ஷோ நடத்தும் பொழுது
அதிகமான கூட்டம், பெண்கள் குழந்தைகள் நெரிசலில் சிக்குதல், அதிக நேரம் காத்திருப்பதால்
பொதுவாக ஏற்படும் உடல்நலக் குறைபாடு என விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. எனவே
நோ சான்ஸ் என்று கையை விரித்துவிட்டார்.
இதற்கு விஜய்யும் அவரது ரசிகர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள்,
பாஜகவை விமர்சனம் செய்வார்கள் என்று பார்த்தால், யாரும் எதுவும் பேசவில்லை.
இது குறித்து நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக், ‘’புதுச்சேரியில்
விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ‘எங்களைப் பார்த்து பயமா?’ என்று
பாஜக கூட்டணியை நோக்கிக் கேட்க விஜய்க்குத் துணிவும், நெஞ்சுரமும் இருக்கிறதா? என்று
கேட்டுள்ளார்.
பொதுக்கூட்டம் என்றால் அதிக செலவு பிடிக்கும், அதோடு அதிக நேரம்
அமர்ந்திருக்கவும் நேரிடும் என்பதால் விஜய் இதனை ஒப்புக்கொள்ள வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
அதுசரி, திமுக என்றால் திட்டுபவர்கள் பாஜகவிடம் பதுங்குவது ஏன்..?