Share via:
முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன் என்று ஆவேசக்குரல்
எழுப்பிவந்த நாம் தமிழர் சீமான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்கமாமல்
வேடிக்கை பார்ப்பது அவரது கட்சிக்குள்ளே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து திருமுருகன் காந்தி, ‘’திருப்பரங்குன்றத்தில்
தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை
உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ்
கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது டில்லி-ஆரிய-சமஸ்கிருத
கும்பல் நடத்தும் தாக்குதல்.
நீதிபதி என்ற முகமூடியில் தமிழ் மாநில அதிகாரத்தை நசுக்கிறார்கள்.
தமிழர் மரபை சமஸ்கிருத மயமாக்க, ஆரிய மயமாக்கும் பணிக்கு கடுமையாக இந்துத்துவ கும்பல்
வேலை செய்கிறது. பல சனநாயக ஆற்றல்கள் தம்மால் இயன்ற எதிர்ப்பை, போராட்டத்தை செய்கின்றனர்.
ஆனால், பாஜக-இந்துமுன்னனி கலவரம் செய்ய முயலும் கடந்த 3 நாட்களாக ‘திராவிட எதிர்ப்பு’
பேசும் அய்யா மணியரசன் அவர்களோ, அவரது இயக்கமோ, நாம் தமிழர் கட்சியோ, சீமானோ, அல்லது
இவர்களது பிரச்சாரகர்களாக வலம்வரும் போலி-வரலாற்று கதை சொல்லிகளோ, நெத்தியிலே விபூதி
வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியம், தமிழர்-தெலுங்கு என வாய்சவடால் பேசும் எந்த கும்பலும்
வாய் திறக்கவில்லை.
இவர்கள் திராவிடத்தை ஆதரித்து இயங்கவேண்டுமென யாரும் கேட்கவில்லை,
ஆனால், பாஜக-ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பதற்கு என்ன குறைச்சல் என கேட்கிறோம். சங்கிகள் கலவரம்
செய்யும் போது, இவர்கள் வாயை மூடிக்கொண்டு அமைதி காப்பதன் நோக்கம் என்ன? ‘திராவிட எதிர்ப்பு
பேசி தமிழ்த்தேசியம் வளர்க்கிறோம்’ என சொல்லும் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்
என்பது அம்பலமாவதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? ஊடகவியலாளன், வரலாற்று ஆய்வாளன்,
தமிழ் ஆன்மீகம் பேசுபவன், குடிபெருமை கொள்பவன், சாதிப்பெயரை வைத்து தமிழரை அடையாளம்
காண்கிறேன் என்பவரெல்லாம் ஆர்.எஸ்.எஸ்சுக்கு கைக்கூலி வேலை பார்க்கிறவர்கள் என்பதே
நிதர்சனமான உண்மை.
‘திராவிடத்தை ஆதரிக்க வேண்டாம், பெரியாரை ஏற்கவேண்டாம் ‘ ஆனால்
தமிழனின் பண்பாட்டு போராட்டத்திற்கு களத்தில் முன்னால் நிற்கவேண்டுமல்லவா? முப்பாட்டன்
முருகன் என வேல்தூக்கி சினிமா காண்பித்த சீமானின் கூட்டம் எங்கே போனது? முப்பாட்டனை
பீகாரிகள் தூக்கிக்கொண்டு ஓடுகிறானே, சீமானுக்கு ரோசம் வரவில்லையா? அய்யா மணியரசன்
அவர்களுக்கு எதிர்க்க தோன்றவில்லையா? கார்ட்டூன் போடவோ, வீடியோ போடவோ, குறிஞ்சி திணை
கதை சொல்லவோ இவர்களுக்கு தெரியவில்லையா?
ஆர்.எஸ்.எஸ்சுக்கு அடிபணிந்து சேவகம் செய்வதை தவிர வேறென்ன தமிழ்,
தமிழர், தமிழ்நாட்டுக்கு இவர்கள் செய்தார்கள்? திமுகவின் தவறுகளை எதிர்த்து மே17 இயக்கம்
போராடிய போராட்டங்களில் கால்விகிதம் கூட போராடாதவர்கள் இவர்கள். திமுக அரசில் மே17
இயக்கம் ஈட்டிய வழக்குகளில் பாதியளவு கூட வாங்குமளவு போராட்டகுணம் இல்லாதவர்கள். ஆனால்
தாம் திமுகவை, திராவிடத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு ஆர்.எஸ் எஸ் கூட்டத்திற்கு சேவை
செய்கிறார்கள். தமிழ்த்தேசிய விடுதலைக்கு மாபெரும் கேடு இந்த கூட்டம். தமிழர் ஒற்றுமைக்கு
உலை வைப்பார்கள், சாதியாய் பிரிப்பார்கள், சமூகநீதியை குலைப்பார்கள், ஆரிய எதிர்ப்பை
தடுப்பார்கள், இந்தியத்தை அரவணைப்பார்கள். திமுகவின் மீது இவர்கள் வைக்கும் அனைத்து
குற்றச்சாட்டுகளையும், இவர்களே செய்து கொண்டிருப்பார்கள். திமுக, அதிமுகவின் மீது குற்றம்சாட்டுவதால்
இவர்கள் அக்மார்க் தமிழ்த்தேசியவாதிகளாகிவிட மாட்டார்கள்.
‘திராவிடம், ஆரியம் ஆகிய
இரண்டும் தமிழனுக்கு கேடு’ என வாய்கிழிய பேசுபவர்கள், திராவிடத்தை எதிர்ப்பார்கள்,
ஆரியத்தை கண்டு அமைதி காப்பார்கள். இதுதான் இவர்களது உண்மையான முகம். இவர்களை திருப்பரங்குன்றம்
அம்பலப்படுத்தியுள்ளது. இசுலாமியர்கள் இவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது…’’
என்று கடுமையான கண்டனம் பதிவு செய்திருக்கிறார்.
சீமான் வழியில் விஜய்யும் கப்சிப் என்று வாய் பொத்திக்கொண்டு நிற்கிறார்.
ஏதேனும் ஒரு பக்கத்தில் நிற்க வேண்டும், நடுவில் நிற்பது சரிதானா என்று இரண்டு கட்சியினரும்
புலம்புகிறார்கள்.