Share via:
தேர்தல் ஆணையத்தை போலி ஆவணங்கள் மூலம் அன்புமணி ஏமாற்றியிருக்கிறார்
என்று டாக்டர் ராமதாஸ் கொடுத்திருக்கும் புகார் பாமக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
அதோடு, தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் விளக்கமும் தங்களுக்கு சாதகமானது
என்று ராமதாஸ் குரூப் கொண்டாடுகிறது.
கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல்
ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில்
அண்மையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘அங்கீகரிக்கப்படாத
கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது;
இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி மீது டெல்லி காவல் துணை ஆணையரிடம்
ராமதாஸ் சார்பில் ஜி.கே.மணி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘எங்கள் கட்சியின்
முன்னாள் தலைவர் அன்புமணி, 4.12.2023 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு போலி ஆவணத்தை
சமர்ப்பித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், பதிவு எண் (56/73/2023) ஆவணத்தின் படி
31.8.2023 அன்று பாமகவின் தலைவராக பதவி ஏற்று கொண்டதாக போலி ஆவணங்களை தயார் செய்து
பதிவு செய்துள்ளார். அந்த ஆவணங்கள் பாமகவின் எந்தவொரு தகுதிவாய்ந்த அமைப்பினாலும் தேர்தல்
அல்லது தேர்வு இல்லாமல், அன்புமணியால் சொந்தமாக உருவாக்கப்பட்டது.
அதேபோல், எங்கள் கட்சி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ முகவரியையும்
அன்புமணி மோசடியான ஆவணத்தால் திருட்டுத்தனமாக மாற்றியுள்ளார். ஆகஸ்ட் 31, 2023 என்ற
தேதியிட்ட ஆவணத்தை உருவாக்கி, (நிறுவனர்) மற்றும் தற்போதைய கட்சியின் தலைவராகிய என்னிடமிருந்து
பாமகவை பறிக்கும் முயற்சி, இந்த செயல் ஜனநாயக அரசியலுக்கு எதிரானது.
எனவே, அன்புமணி மீதும் அவரது தலைமையிலான குற்றவாளிகள் மற்றும்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகுந்த விசாரணை நடத்தி, இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
எடுக்க வேண்டும். அன்புமணி ஊழல் தொடர்பான சி.பி.ஐ வழக்குகளை எதிர்கொள்வதால், உண்மையான
குற்றம் சாட்டப்பட்ட நபரை தண்டிப்பதற்காகவும், நீதி வழங்குவதற்காகவும் இந்த கட்சி விவகாரத்தையும்
சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்றும் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ், ‘’டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்..’’என்று
தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ‘’எங்களிடமே கட்சியும் சின்னமும் இருக்கிறது என்று அன்புமணியும்
கே.பாலுவும் மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறார்கள்.
அடுத்தடுத்த திருப்பம் கட்சியை கரைத்துவருகிறது. அன்புமணியை ஜெயிலுக்கு
அனுப்பாமல் ராமதாஸ் ஓயமாட்டார் போலிருக்கிறது.