Share via:
கரூர் பிரசாரத்தில் காலம் தாழ்த்தி கிளம்பிய விஜய், புதுவைக் கூட்டத்துக்கு
சரியான நேரத்தில் ஆஜரானார். அதனால் எந்த அசம்பவிதமும் நடக்கவில்லை. இதையடுத்து 18ம்
தேதி கூட்டத்துக்கு சரியான நேரத்துக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையத்தில் தவெக தலைவர்
விஜய், நாளை மறுதினம் காலை 11.00 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை வாகனத்தில் உரையாற்றவுள்ளார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள்
குழந்தைகள் யாரும் வர வேண்டாம் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்
வலியுறுத்தியிருக்கிறார். இந்த கூட்டத்திற்கு யாருக்கும் அனுமதி சீட்டு இல்லை. பாதுகாப்பாக
வந்து கூட்டத்தில் கலந்துகொண்டு பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கட்சி
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு 84 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. பாக்ஸ்
பாக்ஸ் ஆக நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாக்ஸிலும் 80%
பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெகுநேரத்திற்கு முன்பே நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்து
குறிப்பிட்ட நேரத்தில் வருவதை உறுதிசெய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின்கம்பங்கள்,
மரங்கள், கட்டிடங்கள், விளம்பர பதாகைகள் மீது யாரும் ஏறி நிற்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின்
வாகனம் வரும் வழியில் ரோட் ஷோ, வரவேற்பு நிகழ்ச்சி, ஊர்வலம் நடந்த அனுமதி இல்லை எனவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சரியான நேரத்துக்கு வருவாரா… ரசிகர்களை உயிருடன் திருப்பி
அனுப்புவாரா என்பதெல்லாம் கேள்வியாக மாறியுள்ளது. புதுவையில் போலீஸாருக்கு நன்றி சொன்னது
போன்று ஈரோட்டிலும் நடந்துகொள்வாரா அல்லது மாஸ் காட்டுவதற்காக லேட்டாக வருவாரா என்பதில்
இருக்கிறது, ரசிகர்களின் உயிர்.