Share via:
நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின்
எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு
அவர் இபிஎஸ்க்கு தங்க முலாம் பூசப்பட செங்கோல் வழங்கினார். இதையடுத்து இந்த தொகுதியில்
தமிழிசை நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும்
இபிஎஸ் கடந்த 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக்
கேட்டறிந்தார். ஆறாவது கட்டமாக நேற்று திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில்
எழுச்சியுரை நிகழ்த்தினார்.
அப்போது அவர், ‘’திமுகவை தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
சொன்னார், அந்த திமுகவை அகற்றவே அதிமுகவை தோற்றுவித்தார். அந்த லட்சியத்தைக் கட்டிக்காத்தவர்
புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களின் லட்சியமும் திமுகவை அகற்றுவதுதான்.
கள்ளக்குறிச்சி அரசு விழாவில் இந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின்
சவால் விட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகிறது. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு
இன்னும் 3 அமாவாசைகள் தான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் 5% பணிகள் தான் நிறைவேற்றப்பட்டதாம்.
ஸ்டாலின் பேசிய கள்ளக்குறிச்சியே அதிமுக ஆட்சியில் தான் உதயமானது.
காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக.
மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டுத் தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம், அதிமுக ஆட்சியில்
5% அல்ல, 95% வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில்
தெரிவித்ததில் 5% மட்டுமே நிறைவேற்றியுள்ளது…’’ என்று ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப்
பேசினார்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் பேசும்போது தமிழிசை கலந்துகொண்டார்.
அவரை பாராட்டி பல இடங்களில் இபிஎஸ் பேசினார். அதேபோல் பேச்சின் முடிவில் அதிமுக கூட்டணியில்
யார் நிறுத்தப்பட்டாலும் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என்று பேசினார். இது இபிஎஸ்
சூசக அறிவிப்பு என்றே அதிமுகவினரும் பாஜகவினரும் சொல்கிறார்கள்.