Share via:
தமிழகத்தையே உலுக்கிய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் பிறந்தநாள் இன்று. அவரது மர்ம கொலை குறித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத ராமஜெயத்தின் கொலை வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 2012ம் ஆண்டு திமுக முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சி மேற்கொண்டிருந்த காலை நேரத்தில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் திருவளர்சோலை அருகே கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் போலீசாரின் விசாரணையைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரின் கரங்களுக்கு இந்த கொலை வழக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் சந்தேகப் பட்டியலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் மோகன்ராம், தினேஷ் ,நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன் ஆகியோரும் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
13 பேரின் வழக்கறிஞர்கள் சார்பில் உண்மை கண்டறியும் சோதனை குறித்து சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி தான் மனு தாக்கல் செய்ய முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதால் இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் கூறும்போது, ‘‘சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. விசாரணையில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால் மறுபடியும் இவ்வழக்கை நீதிபதி சிவக்குமார் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
பல்வேறு சிக்கல்களை தாண்டி உண்மை கண்டறியும் சோதனைக்கு 13 பேரும் ஒப்புக் கொண்ட நிலையில், தென்கோவன் (எ) சண்முகம் மட்டும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பல படிகளை தாண்டி இவ்வழக்கு கிட்டத்தட்ட 10 வருடங்களை கடந்த போதிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதற்கிடையில் ராமஜெயத்தின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள ராமஜெயத்தின் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, தொழில் அதிபர் கே.என்.அருண் நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த ராமஜெயத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.