Share via:
தனக்கு வேலை ஒதுக்கப்படாததால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் முன்பு ஒன்றாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘‘மின்வாரிய அதிகாரிகள், தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த மாதிரியான தகுதி என்பதை அவர்கள் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். எனவே இந்த விவகாரத்தை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு வேண்டும் என்பதே எங்களின் போராட்டத்தின் நோக்கம்’’ என்று இளைஞர்கள் போலீசாரிடம் தெரிவித்த நிலையில் 800 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தில் இளைஞர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை முறியடித்தனர். தற்கொலை முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.