Share via:
திருப்பதி நடைபாதையில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து தற்போது கரடியும் சர்வ சாதாரணமாக வலம் வருவதால் பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சிறுவன் சிறுத்தையால் தாக்கப்பட்டு வனப்பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் மீட்கப்பட்டான். அதைத்தொடர்ந்து 6 வயது சிறுமி சிறுத்தையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த தொடர் சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் அலிபிரி நடைபாதையில் கரடி ஒன்று 7-வது மைலில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியில் இருந்து 12.30 மணிவரை சர்வசாதாரணமாக நடமாடியதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீண்ட நேரம் நடைபாதையிலேயே கரடி திரிந்து கொண்டிருந்தது குறித்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் பக்தர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். க்ஷ
விரைந்து சென்ற வனத்துறையினருக்கு கரடி சிறிது நேரத்திற்கு முன்பு தான் வனப்பகுதிக்குள் சென்றது தெரிய வந்தது.
அசம்பாவிதங்களை தடுக்க கரடி நடமாடிய இடத்தில் கேமராக்களை அதிகப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.