Share via:
கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று கனடா நாட்டில் குடியேறிய காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இக்கொலயில் இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான தூதரக அதிகாரியையும் கனடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருந்த கனடா நாட்டு தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு 5 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஆணை பிறப்பித்தது.
இதற்கிடையில் கனடாவில் வசித்து வரும் இந்துக்கள் வெளியேற வேண்டும் என்று சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எச்சரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தொடர் சம்பவங்களால் இந்தியா& கனடா நாட்டின் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் பஞ்சாப்பில் இருந்து கனடா நாட்டு தப்பிச்சென்றவர் என்பது தெரியவந்துள்ளது.
இரு கும்பலுக்கு இடையில் நடந்த துப்பாக்கிசூட்டில் சுக்தூல் சிங் கொல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிஜ்ஜார் கொல்லப்பட்டது முதல் கனடாவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ள மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

