இரண்டு முறை குண்டர் சட்டம் போடப்பட்ட சவுக்கு சங்கர் நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சென்னைக்கு வந்து செய்தியாளர்களை சந்திப்பார் என்று சொல்லப்படும் நிலையில் தி.மு.க.வுக்கு எதிராக காரசாரமாக ஒரு போஸ்ட் பதிவு செய்திருக்கிறார்.

அந்த பதிவில் சவுக்கு சங்கர், ‘’திமுக அரசை எதிர்த்தே பேசக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் வாய் மூடி மவுனியாக்கப்பட்டுவிட்டதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் யுட்யூப்களில் எழும் குரல்கள் கூட திராவிட மாடல் அரசால் காவல்துறையை வைத்து ஒடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி காவல்துறையால் குறிவைக்கப்பட்டு தொடர்ந்து பழிவாங்கப்படும் இரண்டு சேனல்கள் சவுக்கு மீடியா மற்றும் ரெட்பிக்ஸ்.

செப்டம்பர் மாதம் நான் சிறையிலிருந்து வெளியே வருகையில் காவல்துறை வலியுறுத்தியது அரசுக்கு எதிராகவோ, காவல்துறைக்கு எதிராகவோ எதுவும் பேசக்கூடாது என்பதே. அதைக் கேட்கவில்லை என்பதால், என் மீதும் பெலிக்ஸ் மீதும், இருவரது சேனல்கள் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பொருந்தாதோ என்று நினைக்கும் வகையில் காவல்துறை பேசினாலே வழக்கு பதிவு செய்து கைது செய்கிறது.

நீதிமன்றங்கள் மட்டும் இல்லையென்றால், திராவிட மாடல் அரசின் காட்டாட்சியில் கேள்வி கேட்கவே ஆள் இல்லாமல் போய் விடும். இப்படி அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில்தான் கடந்த ஒரு மாதமாக சிறையில் இருந்து வெளியே வந்தேன். சென்னை மாநகர ஆணையர் அருண் தனது சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்காக வாராகி என்ற பத்திரிக்கையாளர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்தார். குண்டர் சட்டமும் போடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்த பின்னும் 5 மாதங்களாக வாராகி இன்னும் சிறையில் இருக்கிறார். இதற்கு ஒரே காரணம் – அருண் ஐபிஎஸ். கடைசியாக வாராகி மீது போடப்பட்ட 5வது வழக்கு குறித்து நான் 5.12.2024 அன்று சவுக்கு மீடியாவில் பேசியதற்காகத்தான் என் மீதும், சவுக்கு ஊழியர்கள் மீதும் வழக்கு.

எனக்கும் பெலிக்ஸுக்கும் நடப்பவைகளை பார்ப்பவர்கள், அரசுக்கோ, காவல்துறைக்கோ எதிராக பேசலாம் என்று நினைக்கக் கூட மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு கடுமையான அச்சமூட்டும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இத்தகைய அச்சமூட்டும் உணர்வு ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கக் கூடாது. சர்வாதிகாரிகள் ஆளும் நாட்டில்தான் இத்தகைய அச்சம் நிலவும். இத்தகைய ஒரு சூழலில்தான், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், எனக்கு ஜாமீன் வழங்கி அளித்த தீர்ப்பில், காவல்துறையையும், தமிழக அரசையும் சாட்டையால் அடித்திருக்கிறார்.

கருத்து சொல்வதற்காகவெல்லாம் வழக்கு பதிவு செய்து கைது செய்வதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது; கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக கைது செய்வது பாசிசம்; இரண்டு முறை குண்டர் சட்டம் போடப்பட்டு உச்சநீதிமன்றம் விடுவித்தபின்னும், மீண்டும் மீண்டும் சவுக்கு சங்கர் மீது வழக்கு போடப்படுவது ஏற்கத்தக்கதல்ல; சங்கர் குறிவைத்து பழிவாங்கப்படுகிறார்; என்று அழுத்தம் திருத்தமாக ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

நீதிமன்றங்கள், இது போன்ற உறுதியான நடவடிக்கையை எடுக்காவிட்டால், என்னைப் போன்றவர்கள் பேசவே முடியாது. அரசு மற்றும் காவல்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்திசை பாடும் அவல நிலை தமிழகத்தில் ஏற்படும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அளித்துள்ள அந்த சிறப்பான தீர்ப்பு, என் போன்றவர்களுக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாமல், தொடர்ந்து உண்மைகளை அச்சமின்றிப் பேசவும், அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்பதை நினைவுபடுத்தியதற்காகவும், பேச்சுரிமையை யாரும் பறித்து விட முடியாது, கருத்து சொல்வதற்கெல்லாம் கைது செய்வதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை அருண் ஐபிஎஸ் போன்ற தலைக்கனம் பிடித்த தருக்கர்களுக்கு புரியும் வகையிலும் தீர்ப்பளித்த நீதிபதி திரு ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், தமிழகத்தில் ஜனநாயகத்தை நேசிப்போர் சார்பிலும் பெருநன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் சவுக்கு மீடியா தனது பணியை நிறுத்தாது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆக, மீண்டும் சாட்டையடி தொடங்கும் என்றே தெரிகிறது. பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link