Share via:
வரும் 2026 தேர்தலில் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி என்பது
போன்று ஒவ்வொரு மேடையிலும் பேசிவருகிறார் நடிகர் விஜய். அதே பாணியில் இப்போது பெரியாருக்கும்
சீமானுக்கும் போட்டி என்று நாம் தமிழர் பொதுக்குழுவில் பேசியது பரபரப்பாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில்
பேசிய சீமான், ‘’எங்களுக்குத் தேவை இலவசப்
பேருந்து பயணம் அல்ல… உலகத் தரமான இலவசக் கல்வி! சாராயம் விற்பது அரசு வேலையா? ஆடு
மாடு மேய்த்து பால் விற்பது அரசு வேலை இல்லையா? தென் கொரியா, ஜப்பான், பின்லாந்தை விடச்
சிறந்த கல்வியை என் பிள்ளைகளுக்குத் தருவதே என் இலக்கு! ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாத
‘ஒரே தரமான கல்வி’ எல்லோருக்கும் வேண்டும்!
இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல; அது வீழ்ச்சி! கல்வி,
மருத்துவம், குடிநீர் – இவை மட்டுமே இலவசமாக இருக்க வேண்டும்.மிக்ஸி, கிரைண்டர் கொடுத்து
மக்களை ஏமாற்றாதீர்கள்! அதை அவர்களே உழைத்து வாங்கும் அளவுக்கு வேலைவாய்ப்பையும், வருமானத்தையும்
உருவாக்குவதே என் கனவு.
உண்மையில்தான் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள்
மொழி, கலை, இலக்கிய, பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி, அதிகாரம் எல்லாம் சிதைந்து
அழிந்து போனதற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும்,
தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் இங்கே போட்டியே. இங்கே இந்திய திராவிடர்களுக்கும்,
தமிழர்களுக்கும் இடையேதான் போட்டி.
தனித்து நின்று, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சின்னம் பெற்று,
எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தி அங்கீகாரம் பெற்ற கட்சி, நாட்டில் எங்களைத்
தவிர வேறேதும் உண்டா?
வாக்குக்கு காசு கொடுப்போம் என்ற கூட்டத்தை ஆதரிப்பீர்களா அல்லது
மக்களுக்கு வாழ்க்கையை கொடுப்போம் என்பவர்களை ஆதரிப்பீர்களா? இலவசம் என்பது வளர்ச்சித்
திட்டம் அல்ல. அது வீழ்ச்சித் திட்டம். இலவசம் பெறும் ஏழ்மை நிலை இல்லாது மக்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். நல்ல கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கினால் மக்களே தங்கள்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள்…’’ என்று பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்திக்கையில் திருமாவளவனையும் அட்டாக்
செய்தார். பொதுவாக திருமாவளவன் மீது சீமான் விமர்சனம் வைப்பதில்லை. செய்தியாளர்கள்
பாஜக பற்றிய திருமாவளவன் அட்டாக் குறித்து கேட்டார்கள். அதற்கு, ‘’பாஜக வளரும்போது
பக்கத்தில் இருந்து பிரசவம் பார்த்ததே எங்க அண்ணன் திருமாவளவன் தான்!” இந்துக்களின்
எதிரி என்றீர்கள்.. இப்ப RSS கைக்கூலி என்கிறீர்கள்.. கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
நாங்க இல்ல!கொள்கைக்காகப் போராடும் நேர்மையாளர்கள்!
எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். நாங்கள்
திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு
போட்டால் போதும்” என அட்டாக் செய்திருக்கிறார்.
திருமாவளவனின் அட்டாக்கிற்கு விடுதலை சிறுத்தைகள் கப்சிப் என்று
அமைதி காப்பதுதான் ஆச்சர்யம்.