எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பானிசாமி, ‘’கடன் மேல் கடன் வாங்கிக்குவித்து மக்கள் மீது வரி போடும் திமுக அரசு குறித்து  – பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை செய்திகளை வெளியிட்டாலே, திமுக காணாமல் போகும். 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான்’’ என்று ஆருடம் கூறியிருக்கிறார்.

இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளு பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை நாம்தான் அவர்களுக்கு வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் நம்முடைய தலைவர்கள். தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை திமுகவில் வாரிசு உள்ளது. ஜல்லிக்கட்டில் பார்த்திருப்பீர்கள்.

அதிமுகவை அழிக்கவும் உடைக்கவும் பலர் முயற்சிக்கின்றனர். கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. நம்முடைய தலைவர்கள் பல சோதனைகளை கடந்து கட்சியை நடத்தினார்கள். நாமும் அது மாதிரியான சோதனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2026-ம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான். இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை. போட்டோ ஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு, ஒரு குழு அமைப்பார், இந்த அரசாங்கம் குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை.

தற்போது திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நடைபெறுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்து விரைவாக திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் தான் கொண்டு வந்தோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக தேர்தல் 522 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக அரசு. அதில் 20 சதவீதம் அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்துவிட்டார் ஸ்டாலின்.

அதிமுகவின் நிர்பந்தம் காரணமாக பல்வேறு திட்டங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு ஓட்டை உடைசல் தேறாத பேருந்துகளை முன் பின் பெயிண்ட் அடித்து விட்டு இலவசமாக பயணம் செய்ய வைக்கிறார். அதிமுக அட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் சுமார் 2000 பேருந்து மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. நான் சட்டப்பேரவையில் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் திமுகவுக்கு சாவு மணி தான். சோழிங்கநல்லூர் தொகுதியில் மேடவாக்கம் பாலம், வேளச்சேரி மேம்பாலம், மத்திய கைலாஷ் பாலம் இப்படி பல பாலங்களை இந்த பகுதியில் அமைக்கப்பட்டது.

அதிக கனமழை பெய்யும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரெட் அலர்ட் கொடுத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் பல புயல்கள் வந்தது, சிறப்பாக சமாளித்தோம். பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்தோம். ஒரு புயல் வந்தாலே திமுக அரசு காணாமல் போய்விடும்.

மக்கள் துன்பப்படும்போது ஓடோடி உதவி செய்வது தான் நல்ல அரசு. அது அதிமுக மட்டுமே. எதைக் கேட்டாலும் நிதி இல்லை என்கிறார். திமுகவின் அறக்கட்டளையில் ஏராளமான நிதி உள்ளது, அதை எடுத்து மக்களுக்கு செலவு செய்யுங்கள். கார் பந்தயம் தேவையா? ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயம் நடத்த போதுமான இடவசதி உள்ளது. மக்கள் வரிப்பணத்தை ஊதாரியாக திமுக அரசு செலவு செய்கிறது. ஸ்டாலின் அரசு திவால் ஆகப் போகிறது. திமுக அரசு 356 கோடி கடன் உள்ளது. இந்த பணம் எங்கே போனது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு இன்று பதில் அளித்திருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’திட்டங்களைத் தொடங்கிவைத்தால் மட்டும் போதுமா? நிதி ஒதுக்க வேண்டாமா? மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை என்றாலும் தமிழகத்தின் நிதி நிலைமை சீராக இருப்பதாலே எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற முடிகிறது. மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கும் அளவுக்குள் மட்டுமே கடன் வாங்கியிருக்கிறோம்’’ என்று பதில் கூறியிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link