Share via:
ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்கு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் நடக்க
இருக்கிறது. ஈ.வே.ரா.திருமகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவை அடுத்து மீண்டும்
அவரது குடும்பத்தினருக்கே சீட் ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம்
தெரிவித்திருப்பது தி.மு.க.வை அதிர வைத்துள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி
உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இங்கு வரும் பிப்ரவரி
5ஆம் தேதி நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே உள்ள நிலையில் இன்று ஜனவரி
10ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
எதிர்க் கட்சிகள் இன்னமும் தங்கள் முடிவை அறிவிக்காத நிலையில்
காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தெரிகிறது. இங்கு ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய்
போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. இதற்காக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில்
மட்டுமின்றி தி.மு.க.விலும் கடும் எதிர்ப்பை கொடுத்துள்ளது.
மீண்டும் மீண்டும் ஒரே குடும்பத்துக்கு சீட் கொடுப்பது சரிப்படாது.
கடந்த முறை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த நிலையில் தற்போது அதனை
அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, காங்கிரஸ் கட்சியில் சரியான வேட்பாளர் இல்லை
என்றால் தி.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று ஸ்டாலின் எச்சரிக்கை
செய்திருக்கிறாராம். ஆகவே, காங்கிரஸ் கட்சி இப்போது அவசரம் அவசரமாக வேறு ஒரு வேட்பாளரை
தேடும் படலத்தில் இருக்கிறார்கள்.