Share via:
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று (செப்.18) சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு கால ஜனநாயக வரலாறு குறித்து விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தங்கள் அலுவல்களை தொடங்கி செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று முதல் நடைபெற உள்ள கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன? எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவுகள் என்ன? என்பது குறித்த ஆர்வம் உறுப்பினர்கள் மட்டுமல்லாது இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பற்றிய முக்கிய தகவல்கள் உங்களுக்காக:
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை விட புதிய நாடாளுமன்ற கட்டிடம் விஸ்தாரமான அறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டு, 888 இருக்கைகளுடன் புதிய மக்களவை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேசிய மலரான தாமரையை கருப்பொருளாக க் கொண்டு மாநிலங்களவை 348 இடங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு அவைகளையும் ஒரு சேர நடத்துவதற்காக 1,272 இருக்கைகளுடன் கூடிய அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் இருக்கைக்கு அருகே திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள நூலகம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத்தின் திறந்த முற்றத்தில் தேசிய மரமான ஆலமரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.