Share via:
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகைக்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்வியும் மேலோங்கியுள்ளது
இது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா, ராகுல் ஆகியோர் நேற்று முன்தினம் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று இரவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லியில் இருந்து வெளியிடப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில் எதுவும் நடக்கவில்லை.
ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள், புதிய முகங்கள் என பலரது பெயர்கள கட்சித் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
அதன்படி பார்த்தால், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை தமிழக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது. அப்படி செல்வப்பெருந்தகை மாநில தலைவராக நேர்ந்தால், அவர் வகித்து வரும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தரப்படலாம் என்றும் நம்பத் தகுந்த காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.