Share via:
சென்னையில் நடந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கான கருத்துகணிப்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாதியை ஒழிக்க நாங்கள் போராடி வருகிறோம் என்று தெரிவித்தார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பொதுமக்களிடம் கருத்துக் கணிப்புக்கான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்காக தொடங்கப்பட்ட கருத்துக் கணிப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான். சாதியை ஒழிக்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், சனாதனத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கருத்துக்கணிப்பு தொடர்பாக பேசிய அவர், ‘‘அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் வகையில் பொது மக்கள் தயக்கம் காட்டாமல் தங்களை கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசு அடுத்த 25 ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்’’ என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.