Share via:
5வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை!
காஷ்மீரில் தொடர்ந்து 5வது நாளாக டிரோன்கள் உதவியுடன் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை முழுவீச்சில் தேடி வருகின்றனர்.
காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வந்த போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டம் காடோல் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது ராணுவ கர்னல் மன்பிரீத் சிங், ராணுவ மேஜர் ஆஷிஸ் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஹுமாயுன் பாட் ஆகிய 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.
தற்போது 5வது நாளாக வனப்பகுதி மற்றும் கிராமங்களில் டிரோன்கள் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். அப்போது டிரோன்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் புதர் மற்றும் குகை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வனப்பகுதி முழுவதிலும் தேடுதல் வேட்டையை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு படையினர் முழு முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே விரிக்கப்பட்டுள்ள பொறியில் எப்படியும் 3 பயங்கரவாதிகளாவது சிக்கி இருக்கலாம் அல்லது மடிந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

