Share via:
டிசம்பர் 6ம் தேதி
நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே
தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் என்று ஆதாரபூவமாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் விஜய் சந்திப்பு குறித்துப் பேசு அரசியல் குழப்பம்
உருவாக்குகிறார் என்கிறார்கள்.
இன்று திருமாவளவன்
விஜய் சந்திப்பு குறித்து தெளிவாகப் பேசியிருக்கிறார். அதில், ‘’திசம்பர் 06, புரட்சியாளர்
அம்பேத்கர் நினைவுநாளன்று “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் நூல்வெளியீட்டு
விழா நடைபெறவுள்ளது. “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்னும் தொகுப்பினை
‘விகடன் பதிப்பகமும்’ ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்னும் தேர்தல் வியூக நிறுவனமும் இணைந்து
வெளியிடவுள்ளன. வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (விஓசி) என்பது நமது கட்சியின் துணை பொதுச்செயலாளர்
ஆதவ் அர்ஜூன் அவர்களின் நிறுவனமாகும். இத்தொகுப்புக்கான அரும்பணிகளைக் கடந்த ஓராண்டுக்கும்
மேலாக விகடன் பதிப்பகம் மேற்கொண்டு வருகிறது. 36 பேர்களின் கட்டுரைகளைப் பெற்று ஒரு
நூலாகத் தொகுத்துள்ளனர். எனது விரிவான ஒரு நேர்காணலும் அதில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு
முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆனந்த விகடன் இதழைச் சார்ந்த சிலர் புது
தில்லிக்கு வந்து, எனது நேர்காணலை குரல் பதிவு செய்துகொண்டனர். பின்னர் அவற்றை எழுத்தாக்கி
இத்தொகுப்பில் இடம்பெற செய்துள்ளனர். புரட்சியாளர் அம்பேத்கரின் மைந்தர் யஷ்வந்த் அம்பேத்கர்
அவர்களுடைய மகன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்களின் தங்கையின் கணவர், இடதுசாரி சிந்தனையாளர்
ஆனந்த் டெல்டும்டே அவர்களின் கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
நமது கட்சியின் பொதுச்செயலாளர்
தோழர் ரவிக்குமார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு 36 பேரின்
கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்தநூல் கடந்த ஏப்ரலில் புரட்சியாளர் அம்பேத்கர்
பிறந்தநாளையொட்டி வெளியிடுவதாக தான் பதிப்பகத்தார் திட்டமிட்டனர். அப்போதே இந்த நூலின்
வெளியீட்டு விழா குறித்தும் பேசினர். அதில் நானும் பங்கேற்க வேண்டுமென்றும் கோரினர்.
முறைப்படி இசைவுகோரி மடல் எழுதுவோம் என்றும் கூறினர். எனவே, அப்போதே நான் அதில் பங்கேற்க
இசைவளித்துவிட்டேன்.
அந்நிகழ்வில் பங்கேறகுமாறு
தமிழ்நாடு முதலமைச்சரும் நமது கூட்டணியின் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி,
இந்து ராம், திரு. ஆனந்த் டெல்டும்டே போன்றோரை அழைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக, நமது முதலமைச்சர் வெளியிட தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.
அதன்படி, ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் தோழர் கலைச்செல்வன் அவர்கள், விகடன் பதிப்பகத்தின்
பொது மேலாளர் அப்பாஸ்அலி அவர்களின் கையொப்பமிட்ட அழைப்புக் கடிதம் ஒன்றை அக்டோபர்10
அன்று எனக்கு அளித்தார்.
அப்போது நடிகர் விஜய்
அவர்களும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினார். அப்போதைய
சூழலில் நடிகர் விஜய் அவர்களின் கட்சி மாநாடு (அக்- 27) நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் அவர்களின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நாளேடு ஒன்று “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுகிறது”.
இந்த நூல் புரட்சியாளர்
அம்பேத்கர் அவர்களைப்பற்றியது என்பதால் அவரது பிறந்தநாளான ஏப்ரல் – 14 அல்லது அவரது
நினைவு நாளான திசம்பர்-06 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் வெளியிடுவதென தீர்மானிப்பது இயல்பான
ஒன்றேயாகும். அதன்படியே, தற்போது திசம்பர் – 06 அன்று இந்நிகழ்வை நடத்திட ஏற்பாட்டாளர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கட்சி சார்பற்ற விகடன் பதிப்பகம் ஒருங்கிணைக்கும்
ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும், நம்மீது சந்தேகத்தை
எழுப்பி நமது நம்பகத்தன்மையை நொறுக்கிட முயற்சிப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது…’’
என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசும்
தி.மு.க.வினர், ‘’ஆதவ் அர்ஜூனா அதிகாரத்தில் பங்கு குறித்து சமூகவலைதளத்தில் பேசத்
தொடங்கினார். அவர் நடிகர் விஜய்யை சந்தித்து அது குறித்துப் பேசியது எங்களுக்குத் தெரியும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து விஜய் உறுதியளித்த பிறகே புத்தக வெளியீட்டு விழா
தேதி முடிவு செய்யப்பட்டது. திருமாவளவன் சொல்வது உண்மை என்றால் முதலில் ஆனந்த விகடன்
நிறுவனத்தால் புத்தகம் வெளியிடுவதற்கு முதல்வரிடம் தான் தேதி கேட்டிருக்க வேண்டும்.
அப்படி எந்த கடிதமும் அவர்கள் கொடுக்கவில்லை, சந்திக்க ஏற்பாடும் செய்யவில்லை. ஆகவே,
பூசணிக்காய் சோற்றில் இல்லை என்று திருமாவளவன் பொய் சொல்லத் தேவையில்லை.
சர்ச்சையாக ஒரு பிரச்னை
மாறுகிறது என்றால், அந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பதே கூட்டணிக்கு அழகு. ஆனால்,
வேண்டுமென்றே பொய் மேல் பொய் சொல்கிறார்… திருமாவளவன் கூட்டணியை விட்டுச் செல்வதால்
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’’ என்கிறார்கள்.
இதுவும் நியாயம்
தான்.