Share via:
சென்னை தீவுத்திடலில் 3 நாட்களாக நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் உணவுகளுடன் சேர்த்து கலை விழாவும் களை கட்டி வருவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
நேற்று (செப்.17) முதல் நாளை (செப். 19) வரை என தொடர்ந்து 3 நாட்களாக சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா களை கட்டி வருகிறது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து இந்த உணவுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
வார இறுதி நாட்கள் என்பதாலும், விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விடுமுறை நாட்களை கழிக்க பொதுமக்கள் உணவுத் திருவிழாவை தேர்ந்தெடுத்துள்ளது இத்திருவிழாவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
உணவுத்திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 130 அரங்குகளில் சிறுதானிய உணவுகள், மாட்டு இறைச்சி என தனித்தனி அரங்குகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அறுசுவை உணவை ருசித்து சாப்பிடுவோருக்கு இந்த உணவுத் திருவிழா ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
தரமான சுவைகளையும், சுவையான உணவுகளையும் வழங்குவதில் அரங்குகளுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. நாவுக்கு விருந்து அளிக்கும் அதே வேளையில் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து அளிக்கும் விதமாக மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழாவின் நுழைவுவாயிலில் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தி விழாவை மேலும் சிறப்பாக்கவும், விடுமுறையை இனிதே கழிக்கவும் உடனே உணவுத் திருவிழாவுக்கு குடும்பத்துடன் செல்லுங்கள்.