Share via:
சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதோடு சளி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசும் போது, ‘‘சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு 3 நாட்களில் புழுக்களாக மாறி, 8 நாட்களில் கியூபாவாக மாறிவிடும். அதன் பின்னர் 21 நாட்களுக்குள் லட்சக்கணக்கான முட்டைகள் புழுக்களாக மாறி லட்சக்கணக்கணில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடுகிறது.
இதனை ஒழிக்க வீட்டுக்கு வீடு சென்று சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து கொசுக்கள் உற்பத்தியை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்புப் பணி மேலும் தீவிரமடையும் என்று தெரிவித்தார்.
நல்ல தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீட்டு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் கட்டுமானப்பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. அப்பகுதிகளிலும் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வார்கள். வீட்டிற்குள் கொசு உற்பத்தியை தடுக்க வேண்டியது பொதுமக்கள்தான் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்

