Share via:
நிபா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்டம்பர் மாதம் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து அண்டை மாநிலங்களையும் அச்சுறுத்தி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரியில் சுகாதாரத்துறை எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள மாஹே பிராந்தியத்தில் நோய் பரவல் அச்சம் நிலவுகிறது.
இதன் காரணமாக மாஹே பிராந்திய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக பொது மக்கள் அனைவரும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனை சுகாதாரத்துறை கண்காணித்து உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வருகிற செப்டம்பர் 24ம் தேதி வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாஹே பிராந்திய நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வருகிற செப்டம்பர் 24ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.